

பாஜகவின் எழுச்சியால் தமிழகஅரசியல் களம் மாறத் தொடங்கியுள்ளது. ‘இந்து விரோதக் கட்சி’ என்ற முத்திரையை போக்கும் முயற்சியில் திமுகவினர் களமிறங்கி உள்ளனர்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்தி வருகிறது. 1 முதல் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுவந்த ஹரியாணா, வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸை வீழ்த்தி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்குகடும் போட்டியை ஏற்படுத்தியது, தெலங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதியை வீழ்த்தியது என்று பாஜகவின் எழுச்சி மற்றகட்சிகளை உற்றுநோக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் பாஜக இதுவரை3 சதவீத வாக்குகளை தாண்டவில்லை. 1996 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து ஒரு தொகுதியில் வென்ற பாஜக, 2001-ல் திமுக கூட்டணியில் 4 தொகுதிகளை வென்றது. அதன் பிறகு எவ்வளவு முயன்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவால் ஓரிடத்தில்கூட வெல்ல முடியவில்லை.
ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெல்ல பாஜக வியூகம் வகுத்துவருகிறது. அதிமுக அரசின் தடையையும் மீறி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மேற்கொண்டு வரும் வேல் யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பால் அக்கட்சியினர் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் என்றுபாஜகவுக்கு செல்வாக்கே இல்லாத இடங்களிலும் வேல் யாத்திரைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டது தமிழகத்திலும் பாஜக எழுச்சி பெறுகிறதோ என்ற எச்சரிக்கையை திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
முகநூல், ட்விட்டர், யூ-டியூப், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவுக்கு சவால்விடும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களிலும், வேல் யாத்திரையின்போதும் திமுகவை இந்து விரோதக் கட்சிஎன்று பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழந்துவிடுவோமோ என்றுதிமுகவினர் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால், திமுக தனது வியூகத்தை மாற்றத் தொடங்கியுள்ளது. கடந்த 20-ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் தனது சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார பயணத்தை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். அப்போது, வேளாங்கண்ணி தேவாலயத்தின் தலைவருடன் காணொலியில் பேசுவதை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். நாத்திக வாதம் பேசும் திமுக, இந்து அல்லாத மற்றமதத்தவர்களுடன் நெருக்கம் காட்டுவது ஏன் என்று சமூக ஊடகங்களில் பாஜகவினர் கிண்டலடித்தனர்.
அதைத் தொடர்ந்து மறுநாளே, தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இந்தப் படத்தை சமூகஊடகங்களில் பெரிய அளவில் திமுகவினர் விளம்பரம் செய்தனர். இந்து விரோதக் கட்சி என்ற குற்றச்சாட்டை மாற்றும் திமுகவின் உத்தியாகவே இதை அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்றபண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து கூறும் திமுக, தீபாவளிப் பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது இல்லை. ஆனால், திமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் இந்த ஆண்டு முதல் முறையாக ‘தீப ஒளித் திருநாள்’ கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
தவிர, திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் ஒன்றியச் செயலாளர் போன்ற முக்கிய நிர்வாகிகளும் சமூக ஊடகங்களில் முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி வாழ்த்துச் செய்திகளைப் பதிவிட்டனர்.
முன்பெல்லாம் எங்காவது கோயில் இடிக்கப்பட்டால் பாஜக, இந்து அமைப்பினர் மட்டுமே போராடுவார்கள். சமீபகாலமாக கோயில்களுக்காக திமுகவினரும் குரல் கொடுக்கின்றனர்.
தூத்துக்குடியில் விநாயகர் கோயில் அகற்றப்பட்டதை கண்டித்து திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் போராடியதும், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆர்.எஸ்.பாரதி வழிபட்டதும் முக்கிய நிகழ்வுகளாகப் பார்க்கப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, வரும் 2021 பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று தீவிரமாகப் போராடி வருகிறது. அமித் ஷாவின் சென்னை வருகைக்குப் பிறகு திமுக எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்கவைக்கும் அதேநேரம், பெரும்பான்மையினரின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்று கவனத்துடன் திமுக காய் நகர்த்தி வருகிறது.