

தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 13 சிறப்பு ரயில்களில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு 70 சதவீதம் முடிந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு வழித்தடங்களில் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2021-ம்ஆண்டு ஜன.14 முதல் 17-ம் தேதிவரை 4 நாட்கள் பொங்கல் விடுமுறை வருகிறது. இதையொட்டி சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, ஜன.12, 13-ம் தேதிகளில் விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்கள் பெரும்பாலும் விற்றுவிட்டன.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில்வேயில் வழக்கமாக இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை இன்னும்தொடங்கவில்லை. 4 மாதத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லஇப்போதே டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் 70 சதவீதம் இடங்கள் நிறைவடைந்து விட்டன. ஏசி பெட்டிகளில் மட்டும் டிக்கெட்கள் காலியாக உள்ளன.
அடுத்த மாதம் இறுதியில் பயணிகளின் தேவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, வாய்ப்பு உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பது, சிறப்பு ரயில்கள் இயக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றனர்.