

ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவுகளை ரஜினி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார். தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக தெரிவித்தார். அதையடுத்து, மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு, உறுப்பினர் சேர்க்கை, ரசிகர்களை சந்திப்பது என அடுத்தடுத்து அரசியல் தொடர்பாக ஆக்கப்பூர்வமான பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியதால் ரஜினியின் அரசியல் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டது. ‘ரஜினி இனி அரசியலுக்குவரமாட்டார்’ என சில அரசியல் கட்சியினர் வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்தனர். ஆனால், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோ, ‘ரஜினி அரசியலுக்கு வர வேண்டும். நிச்சயம் வருவார்’ என முழு நம்பிக்கையுடன் பேசிவருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு ரஜினி பெயரில் ஓர் அறிக்கை, சமூக வலைதளங்களில் பரவியது. அதில், தனதுஉடல்நிலை குறித்தும், முழுமையான ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதுபற்றி விளக்கம் அளித்த ரஜினி, ‘அந்த அறிக்கைஎன்னுடையது அல்ல. ஆனால், அதில் உள்ள எனது உடல்நிலை தொடர்பான விஷயங்கள் உண்மை’என கூறியிருந்தார்.
இந்நிலையில், அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசிக்க மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை ரஜினி இன்று சந்திக்க உள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணி அளவில் நடக்கவுள்ள இந்த சந்திப்பில் மக்கள் மன்றத்தின் 35 மாவட்டச்செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
அனைவரும் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு பிறகு தனது அரசியல் நிலைப்பாட்டை ரஜினி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.