Last Updated : 30 Nov, 2020 03:10 AM

 

Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

தனி அலுவலகம், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நியமனம்: ஐ.டி. நிறுவனங்கள் போல செயல்படும் அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணிகள்

சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளிலும் தகவல் தொழில்நுட்ப அணி மிகப் பெரிய சக்தியாக மாறியுள்ளது. இவை, ஐ.டி. நிறுவனங்களைபோல அலுவலகம், ஊழியர்களுடன் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன.

அதிவேகமாக வளர்ந்து வரும்தொழில்நுட்பத்தால் இப்போது அனைத்து அரசியல் கட்சிகளிலும் தகவல் தொழில்நுட்ப அணி மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருக்கும்போதே தகவல் தொழில்நுட்பத்தையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்த தொடங்கிவிட்டார். குஜராத்தில் அவரது தொடர் வெற்றிக்கும், பிரதமராக அவர் உயர்ந்ததற்கும் இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது.

மக்கள்தொகையில் முக்கால்வாசி பேரிடம் இணைய வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டதால் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியை தாண்டிவிட்டது. தங்களுக்கு சாதகமான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், தனது அரசியல் எதிரிகளை வீழ்த்தவும் சமூக ஊடகங்களை அனைத்துக் கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றன.

இதற்காக ஒவ்வொரு கட்சியும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக அணியை அமைத்து அதற்கென நிர்வாகிகளை நியமித்து செயல்பட்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப் போல அலுவலகம் அமைத்துநூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் செயல்படுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து கட்சிகளுமே சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றன. திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ இருக்கிறார். அவருக்கு துணையாக அண்ணா நகர் தொகுதி எம்எல்ஏவின் மகன் கார்த்திக் மோகன் உள்ளிட்ட 11 பேர் துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப அணிக்காக தனி அலுவலகம் இயங்குகிறது.

ட்விட்டரில் டிரெண்டிங்

சிந்தாந்த ரீதியாக பாஜகவுக்கும், அரசியல் ரீதியாக அதிமுகவுக்கும் பதிலடி கொடுக்க பஞ்ச் வசனங்கள், மீம்ஸ்கள் உருவாக்குவது, ஆதாரங்களுடன் சிறு சிறு துணுக்குகள், படச் செய்திகள், ஆய்வு ரீதியில்கட்டுரைகள் என்று அவர்கள் பணியாற்றுகின்றனர். திமுகவுக்கு ஆதரவாகவும், பாஜக, அதிமுகவுக்கு எதிராகவும் ட்விட்டரில் டிரெண்டை உருவாக்குவதுஇவர்களின் முக்கியப் பணியாக உள்ளது.

ஒருபக்கம் தகவல் தொழில்நுட்ப அணி களமாட, மறுபக்கம் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் திமுகவுக்காக கடந்த பிப்ரவரி முதல் பணியாற்றி வருகிறது. அவர்கள் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பணியாளர்களை நியமித்து முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திமுகவுக்காக வேலை செய்து வருகின்றனர். 'எல்லோரும் நம்முடன்' என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கையை ஐ-பேக்செயல்படுத்தி வருகிறது.

இதில்கட்சி சாராதவர்கள் பணியில்இருப்பதால் எதிர் விளைவுகளையும் திமுக சந்தித்து வருகிறது.திமுகவுக்கு எதிரான கட்சியினரிடம் ஐ-பேக் ஊழியர்கள் தொலைபேசியில் பேசுவது சமூக ஊடகங்களில் வெளியாகி திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. ஐ-பேக் நிறுவனம் கட்சியினரை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால்திமுகவினரையும், ஆதரவாளர்களையும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளுமாறு ஐ-பேக் நிறுவனத்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் கட்சியினரே உள்ளனர். ஆனால், முறையாக சம்பளம் வழங்கப்படாதது போன்ற பிரச்சினையால் ஊழியர்கள் நெருக்கடியை சந்திப்பதாகவும் கூறப்படுகிறது. ஐ-பேக், தகவல் தொழில்நுட்ப அணி தவிர, திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனக்கென தனியாக ஒரு குழுவை அமைத்து செயல்படுகிறார். அவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் கார்த்திக் மோகன் பொறுப்பாளராக இருக்கிறார்.

திமுகவுக்கு போட்டியாக அதிமுகவும் களமிறங்கியுள்ளது. அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னை மண்டலத்துக்கு அஸ்பயர் கே.சுவாமிநாதன், வேலூர் மண்டலத்துக்கு கோவை சத்யன், கோவை மண்டலத்துக்கு சிங்கை ஜி.ராமச்சந்திரன், திருச்சி மண்டலத்துக்கு பி.வினுபாலன், மதுரை மண்டலத்துக்கு விவிஆர்ராஜ் சத்யன் ஆகியோர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக, அதிமுகவுக்கு சவால் விடும் வகையில் தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அதன் பொறுப்பாளராக சிடிஆர் நிர்மல்குமார் செயல்படுகிறார். தமிழக காங்கிரஸ்கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பொறுப்பாளர்களாக மோகன் குமாரமங்கலம், லட்சுமிகாந்தன் ஆகியோர் இருக்கின்றனர். திமுக, அதிமுக, பாஜகவை ஒப்பிடும்போது காங்கிரஸ் இதில் பின்தங்கியுள்ளது. பாமக, விசிக, இடதுசாரி கட்சிகள், தேமுதிக, தமாகா, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என்று அனைத்துக் கட்சிகளும் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அணியை ஓர் ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x