Last Updated : 30 Nov, 2020 03:10 AM

 

Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அடல் ஓய்வூதிய திட்டத்தில் 17.36 லட்சம் பேர் சேர்ப்பு

சென்னை

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட அடல் பென்ஷன் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 17.36 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.

அமைப்புசாரா துறைகளில் வேலை செய்பவர்களும் ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதற்காக ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 மே மாதம் அறிமுகப்படுத்தியது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 17.36 லட்சம் பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

18 வயது முதல் 40 வயது வரை, வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள அனைவரும் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தில் சேர்பவர்களுக்கு 60 வயதுக்கு பிறகு ஓய்வூதியம் கிடைக்கும். அவர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப குறைந்தபட்சம் மாதம் ரூ.1,000 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும்.

இத்திட்டத்தில் அரசு தன் சார்பாக ஆண்டுக்கு ரூ.1,000 அல்லது நாம் செலுத்தும் தொகையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ, அந்த தொகையை செலுத்தும்.

ஓய்வூதியத் திட்டங்களில்ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களும் இத்திட்டத்தில் இணையலாம். ஆனால், அவர்களுக்கு அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை வழங்காது. அதேபோல, அமைப்புசாரா துறையில் பணியாற்றும்போது இத்திட்டத்தில் சேர்ந்துவிட்டு, பிறகு அமைப்பு சார்ந்த பணிக்கு மாறினாலும், அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை நிறுத்திக் கொள்ளும்.

நாம் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையில்இத்திட்டத்துக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். வங்கி தரப்பில் ஒரு ‘ப்ரான் எண்’ (PRAN NO.) வழங்கப்படும். இதுதான் நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம்.

வங்கிகள், அஞ்சலகங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தில் சேர அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இத்திட்டம் தொடங்கப்பட்ட 2015-16 ஆண்டில் தமிழகத்தில் 1.64 லட்சம் பேர் இத்திட்டத்தில் சேர்ந்தனர். இது படிப்படியாக அதிகரித்து தற்போது 17.36 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 57 சதவீதம் பேரும், பெண்கள் 43 சதவீதம் பேரும் உள்ளனர்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x