பாலாற்றில் உதயம்பாக்கம் - படாளம் இடையே ரூ.270 கோடி செலவில் கதவணையுடன் கூடிய தடுப்பணைக்கு ஒப்புதல்: விரைவில் முதல்கட்ட பணிகள் தொடங்கும் என தகவல்
உதயம்பாக்கம் - படாளம் இடையே பாலாற்றில் ரூ.270 கோடி செலவில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் பாலாறு கீழ் வடி நிலக் கோட்டம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு வண்டலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பாலாற்றில் 7 தடுப்பணைகள் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதன்படி வாயலூர், வள்ளிபுரம் பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டன.
தற்போது பழையசீவரம் பகுதியில் ரூ.43 கோடி செலவில் தடுப்பணை அமைக்கும் பணிகள்தொடங்கி நடைபெற்று வருகின்றன. வாயலூர் மற்றும் வள்ளிபுரம் தடுப்பணைகள் பயனளித்து வரும் நிலையில் உதயம்பாக்கம்-படாளம் இடையே பாலாற்றின் குறுக்கே உலக வங்கி நிதி உதவியுடன் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க ரூ.270 கோடிமதிப்பில் திட்டமதிப்பீடு தயாரித்துஅரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
4-வது தடுப்பணை
இத்திட்டத்துக்கு உலக வங்கிமற்றும் அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் மூலம், விரைவில் தடுப்பணை பணிகள் தொடங்கப்பட உள்ளதாக பாலாறு கீழ்வடி நிலக்கோட்டம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பாலாறு கீழ் வடிநிலக் கோட்ட அதிகாரிகள் கூறும்போது, "உதயம்பாக்கம்-படாளம் இடையே பாலாற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. இதில், முதற்கட்டமாக தடுப்பணையும் பின்னர் கதவணை மற்றும் வாகனபோக்குவரத்துக்கான மேம்பாலமும் அமைய உள்ளன. இத்திட்டத்துக்கு ரூ.270 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளரூ.110 கோடி நிதியின் மூலம் தடுப்பணை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. இதன்மூலம், பாலாற்றில் நான்காவது தடுப்பணை அமைய உள்ளது.
இத்தடுப்பணை மூலம், படாளம் கிராமத்தில் இயங்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவர். சுற்றியுள்ள 50-க்கு மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் மேம்படும்" என்றனர்.
