

கோயம்பேடு சந்தையில் 7 மாதங்களுக்கு பிறகு சில்லறை விற்பனை காய்கறி கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
கோயம்பேடு சந்தையில் கரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, அங்குள்ள சில்லறை காய்கறி மற்றும் பழக் கடைகள் மூடப்பட்டன. மொத்த காய்கறி மற்றும் பழக்கடைகள் மட்டும் செயல்பட்டு வந்தன. கரோனா மேலும் அதிகரித்ததைத் தொடர்ந்து மே 5-ம்தேதி சந்தை வளாகம் முழுவதும் மூடப்பட்டது. காய்கறி சந்தை திருமழிசைக்கும், பழச் சந்தை மாதவரம் பேருந்து நிலையத்துக்கும் தற்காலிகமாக மாற்றப்பட்டன.
சிறப்பு பூஜைகள்
வியாபாரிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி காய்கறி மொத்த வியாபார கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக பழச் சந்தை, பாதி எண்ணிக்கையில் சில்லறை விற்பனை காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகள் திறக்கப்பட்டன. இதர சில்லறை விற்பனை காய்கறி கடைகள் 7 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன.
முன்னதாக வளாகத்தை தூய்மை செய்த வியாபாரிகள், வண்ணம் தீட்டுதல், விற்பனைக்கு கடைகளை தயார் செய்தல் போன்ற பணிகளை நேற்றுகாலை முதல் மேற்கொண்டனர். தொடர்ந்து குடும்பத்துடன் பல்வேறு யாகங்கள் நடத்தி, எடைக் கருவிகள் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பூஜைகளை செய்து வியாபாரத்தை தொடங்கினர். நேற்று மாலையே கொள்முதலை தொடங்கிய வியாபாரிகள், இன்று அதிகாலை முதல் விற்பனையை தொடங்கினர்.
மகிழ்ச்சி அளிக்கிறது
இது தொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, “பெரிய கடைகளுக்கு மாற்று இடம் வழங்கிய அரசு, சிறு வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கவில்லை. கடந்த 7 மாதங்களாக தொழில் செய்ய முடியாமல், வருவாயின்றி அவதிப்பட்டு வந்தோம். எங்களை நம்பியுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களும் அவதிப்பட்டன. தற்போது கடையை திறக்க அனுமதித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றனர்.