Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

சென்னை புறநகரில் பெய்த கனமழையால் சிக்கராயபுரம் கல் குவாரிகளில் 50 சதவீதம் நீர் நிறைந்தது: தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்துக்கு இணையாக மாற்ற மக்கள் கோரிக்கை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் குவாரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் அருகில் உள்ள சிக்கராயபுரம் குவாரியில் உள்ள நீரின் தற்போதைய நிலை. படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை

சென்னை புறநகரில் பெய்த கனமழையால் சிக்கராயபுரம் கல் குவாரிகளில் 50 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்துக்கு இணையாக இதை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகருக்கு மாதம் ஒரு டிஎம்சி நீர் தேவை. தற்போது சென்னைக்கு முக்கிய நீராதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளில் 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும். இதில் நீர் ஆவியாதல் போன்ற சிக்கல்களும் உள்ளன. அதனால் சென்னை மாநகரின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் நீர்த்தேக்கங்கள் தேவை. இதன் காரணமாகவே திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ரூ.380 கோடியில் கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அரை டிஎம்சி (500 மில்லியன் கன அடி) நீரை சேமிக்க முடியும்.

இந்நிலையில்தான் சென்னை குடிநீர் வாரியத்துக்கு சிக்கராயபுரத்தில் 25 கல் குவாரிகள் கிடைத்தன. இந்த குவாரிகளை முதலில் ஆய்வு செய்யும்போது அதன் கொள்ளளவு 350 மில்லியன் கன அடியாக இருந்தது. அதுவே அந்த குவாரிகளின் கொள்ளளவாக நிர்ணயிக்கப்பட்டது. புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் இந்த ஏரிக்கு கடந்த 3 நாட்களாக மழைநீர் வந்தவண்ணம் உள்ளது. தற்போது அவற்றில் 50 சதவீதம் நீர் நிறைந்துள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும்போது, "தற்போது பெய்த மழையால் கல் குவாரிகளுக்கு நீர் வந்துள்ளது. திட்டமிட்டு முறையாக பராமரித்தால் இங்கு 500 மில்லியன் கன அடி வரை நீரை தேக்க முடியும். செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரை அரசு அடையாற்றில் திறந்துவிட்டது. அதற்கு பதிலாக ஏரி மதகு வழியாக இந்த குவாரிக்கு நீரை திறந்து விட்டிருக்கலாம். இவ்வாறு செய்தால், ரூ.380 கோடியில் அமைக்கப்பட்ட தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்துக்கு இணையாக இதில் நீரை தேக்கி வைத்திருக்க முடியும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

இதற்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வரும் கசிவுநீர் பிரதான குவாரியில் விழும். அது நிறைந்து பிற குவாரிகளுக்குச் செல்லும். குடிநீர் வாரியம் சார்பில் தற்போது குவாரிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக, கிடைக்கும் மழைநீர் பரவலாக பெரும்பாலான குவாரிகளுக்கு சமமான உயரத்தில் சென்றுள்ளது. அந்த குவாரிகள் சில மாதங்களுக்கு முன்பு வறண்டு இருந்தன. தற்போது 50 சதவீதம் அதாவது 170 மில்லியன் கனஅடி நீர் தேங்கியுள்ளது. அதில் மேலும் நீரை தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x