

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், நேற்று மாறு வேடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்து நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண டைந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். காதல் விவகாரத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி பள்ளி பாளையம் அடுத்த கிழக்கு தொட்டி பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அவர் ரயிலில் அடிபட்டு தற்கொலை செய்தி ருக்கலாம் என்ற கோணத்தில் பள்ளிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், கோகுல்ராஜ் உடலை சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசார ணையில் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப் பட்டு திருச்செங்கோடு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை அதிகாரியாக திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா நியமிக்கப் பட்டார்.
கோகுல்ராஜ் கொலை தொடர்பாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், 20 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். யுவராஜ் தலைமறைவானார்.
இந்நிலையில் டிஎஸ்பி விஷ்ணு பிரியா கடந்த செப்டம்பர் 18-ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிஎஸ்பி தற்கொலை வழக்கு மற்றும் கோகுல் ராஜ் கொலை வழக்கு ஆகியவற்றை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையில், ‘டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலைக்கு உயர் அதிகாரிகள் நெருக்கடிதான் காரணம். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோகுல்ராஜ் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை’ என வாட்ஸ்அப் மூலம் யுவராஜ் ஆடியோ வெளியிட்டதோடு, தனியார் தொலைக்காட்சிகளுக்கும் தொடர்ந்து பேட்டி அளித்து வந்தார்.
கோகுல்ராஜ் கொலை மற்றும் டிஎஸ்பி தற்கொலை தொடர்பாக 4 முறை வாட்ஸ்அப் மூலம் ஆடியோ வெளியிட்டு யுவராஜ் பரபரப்பு ஏற்படுத்தி வந்தார். போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்த யுவராஜ், திடீரென நாமக்கல் சேலம் சாலையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அக்டோபர் 11-ம் தேதி (நேற்று) காலை 10.30 மணிக்கு சரணடையப் போவதாக வாட்ஸ்அப்பில் ஆடியோ மூலம் வெளியிட்டதோடு, தனியார் தொலைக்காட்சிக்கும் பேட்டி அளித்தார்.
இதையடுத்து, நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று காலை முதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல நாமக்கல் நகரப் பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் 16 சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிர தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பரபரப்பான சூழலில் காலை 10.55 மணியளவில் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு இரு சக்கர வாகனத்தில் மாறுவேடத்தில் வந்து யுவராஜ் சரணடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையிலான போலீஸார் வழக்கு தொடர்பாக விசாரணையை தொடங்கினர்.
யுவராஜ் பேட்டி
நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்த யுவராஜ் கூறும்போது, “இந்த வழக்கு பொய் வழக்கு என்பதை சட்டப்படி நிரூபிப்பேன். டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.