

பல்லாவரம் பெரிய ஏரியை, உலக வங்கி நிதியுடன் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சீரமைத்தும்கூட, அதில் மீண்டும் கழிவுநீர் கலப்பதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையால் 2 பகுதிகளாக பிரிந்து கிடக்கும் பல்லாவரம் பெரிய ஏரியின் ஒருபகுதியில், நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருந்த இந்த ஏரி உலக வங்கி நிதி ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் துார்வாரி ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தி, கருங்கற்கள் பதித்து, மதகு அமைத்து, கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
சமீபத்தில் பெய்த கனமழையால் பல்லாவரம் ஏரி நிரம்பி காணப்பட்டாலும், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடையவில்லை. ஏரியில் கழிவுநீர் கலந்து ஏரி நீரோடு நிலத்தடி நீரும் மாசடைந்து வருவதுதான் காரணமாகும்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பல்லாவரம் ஏரியில் கழிவுநீரை விடுவதாலும், இறைச்சி கழிவுகளை கொட்டுவதாலும் ஏரி நீரும் நிலத்தடி நீரும் மாசடைகிறது. பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் பயணிப்போர் இந்த ஏரியை கடந்து செல்லும் போது, துர்நாற்றத்தால் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலை உள்ளது.
நகராட்சி நிர்வாகம், ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கழிவுநீர் கலப்பதை தடுத்து ஏரியை முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர்.