

செம்பரம்பாக்கம் ஏரி நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் மதகுகளை சரி செய்ய வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ‘நிவர்' புயலையொட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீரை வெளியேற்றத் திறந்துவிடப்பட்ட 2 மற்றும் 3-வது மதகுகளை மூடமுடியாமல் இப்போது 400 கனஅடி நீர் வீணாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஏரி மதகுகளைப் பராமரிப்பதற்கென்றே நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதன்படி அந்தப் பணிகள் நடப்பதில்லை என்பதற்கு, செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளின் நிலையே சாட்சி. தலைநகர் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரியைப் பராமரிப்பதிலேயே இவ்வளவு அலட்சியம் என்றால், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருக்கும் ஏரிகளை எப்படி பராமரித்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.
2015 பெருவெள்ளத்தின் போதும் திடீரென்று 30 ஆயிரம் கனஅடி நீரைத் திறந்துவிட்டு சென்னையை வெள்ளக்காடாக்கி - மக்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டது அதிமுக அரசு. அப்போதும் செம்பரம்பாக்கம் மதகு பிரச்சினை இது மாதிரி வெடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படியொரு நிலைமை இப்போதும் செம்பரம்பாக்கம் ஏரியில் அதிமுக ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ளது.
சென்னை மக்களை மீண்டும் குடிநீருக்குத் திண்டாட வைக்கும் வகையில் 400 கனஅடி நீர் வீணாகும் அவலநிலையை அதிமுக அரசு உருவாக்கியிருப்பது கண்டனத்திற்குரியது.
எனவே, பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் முதல்வர் என்ற முறையில் உடனடியாக செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளைச் சீரமைத்து மூட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.