

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பழநி தொகுதியில் போட்டியிட பாஜகவினர் ஆர்வம் காட்டுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய ஏழு சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2016 தேர்தலில் அதிமுக ஏழு தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதில் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை கூட்டணிக் கட்சியான பாஜக ஆன்மிகத் தலமான பழநியைக் குறி வைத்து களம் இறங்க முடிவு செய்துள்ளது. நேற்றுமுன்தினம் பழநியில் நடந்த வேல் யாத்திரையில் பழநியை தனி மாவட்டமாக்க வேண்டும். தைப் பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும். பழநிக்கு அதிக ரயில்கள் விட மத்திய அரசை வலியுறுத்துவோம் எனப் பழநியை மையமாகக் கொண்ட பல கோரிக்கைகளை பாஜகவினர் முன்வைத்தனர். இதன் மூலம் பழநி தொகுதியை கூட்டணியில் கேட்டுப்பெற அக்கட்சியினர் பலரும் கட்சித் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.
பழநியில் கடந்த முறை அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. குமாரசாமி போட்டியிட்டு திமுக செயலாளர் இ.பெ.செந்தில் குமாரிடம் தோல்வியடைந்தார். இந்த முறை அதிமுகவில் எம்.எல்.ஏ. சீட் கேட்கப் பலர் ஆர்வத் துடன் இருந்தபோதும், கூட்டணிக் கட்சிக்கு விட்டுத்தர அதிமுக தயங்காது என்றே தெரிகிறது.
அதிமுக முதன் முதலில் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியையே கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு விட்டுக் கொடுத்தது. இதனால் இந்த முறை பழநியை அதிமுகவிடம் இருந்து கேட்டுப் பெறுவதில் சிரமம் இருக்காது என்றே பாஜகவினர் தெரிவித்தனர்.
கந்த சஷ்டி சர்ச்சையில் எதிர்ப்புக் குரல், வேல் யாத்திரை ஆகியவை தங்களுக்குக் கை கொடுக்கும் என பாஜகவினர் எதிர்பார்க்கின்றனர்.