

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் சிபிசிஐடி போலீஸில் இன்று சரணடைவதாக வாட்ஸ்அப் மூலம் போலீஸாருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
தலைமறைவாக உள்ள யுவராஜ் ‘வாட்ஸ் அப்’ மூலம் நேற்று வெளி யிட்ட தகவல் விவரம்:
சுமார் 100 நாட்களுக்கும் மேலாக என் மீதும், எனது சொந்தங்களின் மீதும் சுமத்தப்பட்ட கொலை குற்ற வழக்கு தொடர்பான பதற்ற சூழ் நிலை (இன்று) 11 ம் தேதி காலை 10.30 மணியுடன் முடிவுக்கு வரும் என நான் நம்புகிறேன். காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளான எஸ்பி நாகஜோதி, சிபிசிஐடி ஏடிஎஸ்பி ஸ்டான்லி, டிஎஸ்பி வேலன் ஆகி யோர் முன்னிலையில் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி றேன்.
சிபிசிஐடி வசம் வழக்கு வந்த நாள் முதல் பேரவையினர், குடும்பத் தாரிடம் சிபிசிஐடி போலீஸார் நாகரீகமாக நடந்து கொண்டு வருகின்றனர். அவர்களை மேலும் அலைக்கழிக்க விரும்பவில்லை. அப்போது இருந்த அதிகாரிகளின் தவறான அணுகுமுறையால், நான் சரண் அடைவதில் தாமதம் ஏற்பட்டது.
காவல்துறையில் இருந்து தவறு செய்த ஒருசில அதிகாரிகளின் தவறான, சட்டவிரோதமான செயல் பாடுகளைக் கண்டித்து அவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் என் நோக்கமே தவிர, காவல் துறையினரை பல்வேறு தரப்பின ரும் குறைகூறுவதற்கும், காவலர் களின் நடைமுறை சிக்கல்களை புரிந்துகொள்ளாமல் சமூக ஊடகங் களில் தவறாக சித்தரிப்பதற்கும் நான் காரணமாக இருக்க விரும்ப வில்லை.
இதுநாள் வரை நான் வெளி யிட்ட ஆடியோக்கள், தொலைக் காட்சிக்கு நான் அளித்த பேட்டி ஆகியவை நியாயமானதே. நான் குற்றம்சாட்டப்பட்டவன்தானே தவிர குற்றவாளி அல்ல. எனவே, சட்டப் படி, ஜனநாயகப்படி என் கருத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமையுண்டு. எவ்வாறு என் மீது கொலைக் குற்றம் சுமத்தி ஊடகங்களில் வெளியிட சட்டப்படி, ஜனநாயகப்படி உரிமை உள்ளதோ அப்படியே எனக்கும் தவறு செய்த அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தவும் எனது தரப்பு நியாயங்களை வெளியிடவும் சட்டப்படி உரிமையும் ஆதாரங்களும் இருக்கின்றது என்பதே உண்மை.
அநியாயமாக ஒரு நேர்மையான அதிகாரியை (டிஎஸ்பி விஷ்ணு பிரியா) இழந்திருக்க மாட்டோம். எப்போதும் உங்களுக்கு (சிபிசிஐடி) நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். என் மீதான வழக்கு பற்றி கவலை இல்லை. ஆனால், விஷ்ணுபிரியா அவர்களின் மரணத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க தவறினால் சட்டப்படி நான் எடுப்பேன். அதற்கு இடையூறு எந்தவிதத்தில் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கின்றேன்.
நான் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. காவல்துறை போட் டுள்ள அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திக்க தயாராக உள் ளேன். தங்களை நேரில் சந்திக்க நான் தயாராகி விட்டேன். கேள்வி களுடன் நீங்கள் தயாராக இருங் கள். இவ்வாறு யுவராஜ் ‘வாட்ஸ் அப்’ மூலம் தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏ தனியரசு மீது புகார்
‘வாட்ஸ் அப்’ மூலம் யுவராஜ் பேசியதில் தனியரசு மீதான சாடல் அதிகளவு இருந்தது. அதில் யுவராஜ் பேசும்போது, ‘என் மீதான வழக்குக்கு யார் காரணம் என்று எனக்கு தெரியும். வழக்கில் சேர்க்கவும், கைது செய்யவும் அழுத்தம் கொடுத்த பின்னணியில் பரமத்திவேலூர் எம்எல்ஏ தனியரசு உள்ளார் என்பதாலே அவர் பெயரை நான் கூறுகிறேன். அவர் என்ன என்ன செய்தார் என்பதெல்லாம் எனக்கு நன்றாக தெரியும். அதனை தக்க தருணத்தில் கூறுவேன்’ என்றும் பேசியுள்ளார்.
யுவராஜ் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனியரசு செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘காலை முதல் அரசு நிகழ்ச்சிகளில் இருப்பதால் ஊடகங்களில் வெளியான செய்தியை நான் பார்க்கவில்லை. வாட்ஸ்அப் மூலம் வெளியான ஆடியோவில் உள்ள தகவலும் எனக்குத் தெரியாது’ என்றார்.