Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

கரோனா ஊரடங்கை பயனுள்ளதாக்கிய மாணவர்கள் மாடித்தோட்டத்தில் காய்கறி உற்பத்தி

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பள்ளி மாணவர்கள் 3 பேர், மாடித்தோட்டம் மூலம் காய்கறிகளை உற்பத்தி செய்து கரோனா கால விடுமுறையை பயனுள்ளதாக்கி உள்ளனர்.

கமுதி அருகே ராமசாமிபட்டி யைச் சேர்ந்தவர் பாண்டி. மனைவி தேவி. இவர்களது மகள்கள் ரித்திகா (11-ம் வகுப்பு), பாண்டீஸ்வரி (7-ம் வகுப்பு), மகன் சிவசங்கர் (8-ம் வகுப்பு). இவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

கரோனா ஊரடங்கு விடுமுறையில் பெரும்பாலான மாணவர்கள் மொபைல் வீடியோ கேம், டிவி என நேரத்தை வீணடித்து வருகின்றனர்.

ஆனால், இவர்கள் மூவரும் சேர்ந்து தங்கள் வீட்டு மாடியில் மாடித் தோட்டம் அமைக்கத் திட்டமிட்டனர். இதையடுத்து, தங்கள் கிராமத்தில் பயனற்று கிடந்த குடிநீர் கேன், சிமெண்ட் சாக்குகள், பிளாஸ்டிக் டப்பாக்களை சேகரித்து தேவைக்கு ஏற்ப அவற்றை வடிவமைத்து, அதில் மண்ணை நிரப்பி, காய்கறி, மூலிகை விதைகளை நட்டனர். இதை காலை, மாலையில் நீர் தெளித்துப் பராமரித்தனர். தற்போது அந்தச் செடிகள் நன்கு வளர்ந்து காய்கறிகள் காய்க்கத் தொடங்கி உள்ளன.

இதுகுறித்து மாணவர் சிவசங்கர் கூறியதாவது: இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்ய நானும் சகோதரிகளும் சேர்ந்து மாடித் தோட்டம் அமைத்தோம். தற்போது வீட்டுக்குத் தேவையான கத்தரி, தக்காளி, மிளகாய், பாகற்காய், வெள்ளரி, அவரை, சுரை, பீர்க்கன், பூசணி உள்ளிட்ட காய்கறிகள், கீரைகள், துளசி, வெற்றிலை, ஓமம் உள்ளிட்ட மூலிகைச் செடிகள், மல்லிகை, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பூச்செடிகளை வளர்த்து வருகிறோம் என்றார். இம்மாணவர்களின் முயற்சியை அக்கம் பக்கத்தினர் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x