Published : 29 Nov 2020 09:11 PM
Last Updated : 29 Nov 2020 09:11 PM

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; கரை திரும்பாத 210 படகுகளை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை

தென்கிழக்கு வங்கக் கடலில் புதியதொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தூத்துக்குடி (38) மற்றும் கன்னியாகுமரி (172) மாவட்டங்களைச் சார்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பில் தற்போது ஈடுபட்டுள்ள 210 படகுகளைக் கடலோரப் பாதுகாப்புப் படை உதவியுடன் பத்திரமாக கரைக்குக் கொண்டு வர தமிழக அரசால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியிட்ட அறிக்கை:

''இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி நவ. 28 அன்று தென்கிழக்கு வங்கக் கடலில் புதியதொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும் (புரெவி) இது வரும் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் வடஇலங்கை வழியாக மன்னார் வளைகுடா கடற்பகுதியினைக் கடந்து குமரி கடல் வழியே அரபிக் கடலுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தென்தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, மற்றும் குமரி மாவட்ட மீன்துறை இணை/துணை/உதவி இயக்குநர்களைக் காணொலி வாயிலாகத் தொடர்பு கொண்டு, மீனவர் கூட்டுறவு சங்கங்கள், ஆழ்கடல் மீன்பிடி ஒருங்கிணைப்பு சங்கங்கள் மற்றும், தேவாலயங்கள் மூலம் புயல் எச்சரிக்கைத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ. 29 முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென்றும், ஏற்கெனவே ஆழ்கடல் மீன்பிடிப்பிலுள்ள விசைப்படகுகளை, செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் விஎச்எப் தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் தொடர்புகொண்டு அருகிலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் / மீன்பிடித் தளங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்குக் கரை திரும்பிட உரிய நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளைத் தொடர்புகொண்டு அவற்றைப் பாதுகாப்பாகக் கரை திரும்ப ஏதுவாக கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் (தொடர்பு எண்: 04651- 226235) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தில் (தொடர்பு எண்: 0461 – 2320458) 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன. மீன்வளத்துறை இயக்குநரகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்தும் (தொடர்பு எண்: 044-29530392) உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், தூத்துக்குடி (38) மற்றும் கன்னியாகுமரி (172) மாவட்டங்களைச் சார்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பில் தற்போது ஈடுபட்டுள்ள 210 படகுகளைக் கடலோரப் பாதுகாப்புப் படை உதவியுடன் பத்திரமாக கரைக்குக் கொண்டு வர தமிழக அரசால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 8 படகுகள் இதுவரை கரைக்குத் திரும்ப வந்துள்ளன.

மேலும், மீன்வளத்துறை இயக்குநரால் அண்டைய மாநிலமான கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் மீன்துறை இயக்குநர்களுக்கு அம்மாநில மீன்பிடித் துறைமுகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கவும் உரிய உதவிகள் வழங்கிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கொச்சின், கோவா, மும்பை மற்றும் லட்சத்தீவில் உள்ள இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை மூலம் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 218 படகுகளின் இருப்பிடம் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டு அவர்களைக் கரைப்பகுதிக்கு மீட்பு செய்து கொண்டு வரவும் கடலோர பாதுகாப்புப்படை அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இதுவரை 8 படகுகள் திரும்ப வந்துள்ளன. மேலும், கரை திரும்பாத மீனவர்கள் மற்றும் 210 படகுகளை பாதுகாப்பாக மீட்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது".

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x