Published : 29 Nov 2020 01:07 PM
Last Updated : 29 Nov 2020 01:07 PM

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டண வசூல்; ஈரோடு, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராகப் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

கோப்புப் படம்

சென்னை

அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை மீறி தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி சென்னையில் பெற்றோர், மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:

''சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து, 2013 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. அப்பல்கலைக்கழகத்துடன் இணைந்ததுதான் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் அவற்றிற்கு மாணவர் சேர்க்கையும் 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

அது கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் தற்பொழுது செயல்பட்டு வருகிறது. ஆனால் அக்கல்லூரியின் கல்விக் கட்டணம் ஏற்கெனவே இருந்த அளவிற்கே ரூ 5.44 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.

சென்ற ஆண்டு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கின் மூலம், பிற தனியார் மருத்துவக் கல்லூரிகளை விடக் கூடுதலாக வசூல் செய்யப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு கல்விக் கட்டணம் ரூ 4 லட்சம் என அரசு மாணவர் சேர்க்கை குறிப்பேட்டில் வெளியிட்டது. ஆனால், அதை ரூ 5.44 லட்சமாக அதிகரித்து , 12.11.2020 அன்று அரசு மீண்டும் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாளாக 30.11.2020-ஐ நிர்ணயித்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

அதேபோல், ஈரோடு மாவட்டம், IRT பெருந்துறை மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்தி வருகிறது. தற்பொழுது அது, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்படுகிறது. அக்கல்லூரிக்கான கட்டணமாக ரூ 3.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். இந்த மருத்துவக் கல்லூரிகளையும், ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்ற பிறகு, அவை அரசு மருத்துவக் கல்லூரிகளாகச் செயல்படுகின்றன. அவ்வாறு இருக்கும்போது, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கட்டணத்தைத்தான், இக்கல்லூரிகளிலும் அரசு வசூல் செய்ய வேண்டும்.

அதை விடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலாக கட்டணத்தை வசூல் செய்வது நியாயமல்ல. தமிழக அரசே, வசதி படைத்தோருக்காக, தனியாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும், ஒரு பல் மருத்துவக் கல்லூரியையும் நடத்துவதுபோல் இது உள்ளது. இது சமூக நீதிக்கும்,ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரானது.

• எனவே, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணமான ரூ.13,670-ஐ, இந்த இரு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.

• கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (பழைய பெயர் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி), அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமான ரூ.11,610-ஐ மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.

* இக்கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவம்/ முதுநிலை பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும், இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் குறைக்க வேண்டும்.

• கட்டணத்தைக் கட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் போக்கை இக் கல்லூரிகளின் நிர்வாகங்கள் உடனடியாகக் கைவிட வேண்டும்.

• தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே ஏற்றது போல், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

• அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தொழிற் கல்லூரிகளில் பயிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிட, தனி நிதியத்தை ( முதலமைச்சர் நிவாரண நிதி போல் ) அரசு உருவாக்கிட வேண்டும்.

• "போஸ்ட் மெட்ரிக்" கல்வி உதவித் தொகையையும் முறையாக வழங்கிட வேண்டும். அதை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கான வருமான வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து, ரூ.8 லட்சமாக அதிகரிக்க வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின், கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. அவற்றைச் சரிபாதியாகக் குறைக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (29.11.2020 ஞாயிறு) காலை சென்னை மாவட்ட ஆட்சியரகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.ஆர்.சாந்தி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஜி.ஆர்.ரவீந்திரநாத் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கடலூர் பல் மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x