

வங்கி அதிகாரிகள் போல பேசி, பணத்தை கொள்ளையடிக்கும் நபர்களை கண்டுபிடிப்பது மிகவும்சிரமமான செயல் என்று சைபர்கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வங்கியில் இருந்து மேலாளர்பேசுவதாகக் கூறி, டெபிட் மற்றும்கிரெடிட் கார்டு விவரத்தைப் பெற்று,பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகின்றன. இவ்வாறு 100 புகார்கள் பதிவானால்அதில் 2 பேருக்கு மட்டுமே பணம்திரும்ப கிடைக்கிறது. பாதிக்கப்படும் பலர் அலைக்கழிப்புக்கு ஆளாகி சோர்ந்து விடுகின்றனர்.
இந்த மோசடி நபர்களை கண்டுபிடிக்க முடியாத நிலைகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:
‘வங்கி மேலாளர் ராம்குமார் பேசுகிறேன்’ என்று தொடங்கி, டெபிட் கார்டின் எண் மற்றும் அதன் பின்புறம் உள்ள சிவிவி எண் ஆகியவற்றை ஏதாவது ஒரு கவர்ச்சிகரமான காரணம் சொல்லி ஏமாற்றி வாங்கி, வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடும் அந்த மோசடி நபரை பல நாட்களாகத் தேடி வருகிறோம் இப்போது இதுபோல் பல குழுக்கள் கிளம்பி உள்ளதாகத் தெரிகிறது. அந்த நபரை பிடிக்க நாங்கள் எடுத்த நடவடிக்கை எல்லாமே தோல்விதான்.
இந்த மோசடி அழைப்பு எண்கள்பெரும்பாலும் உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், பிஹார், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் இருப்பதாகவே காட்டுகிறது. பெரும்பாலான புகார்கள் ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவானதாகவே இருப்பதால் அடுத்த மாநில போலீஸாரின் உதவிநாடுவதில்லை. மோசடி நபரின் எண் உடனே போலீஸாருக்கு கிடைத்தாலும் அந்த நபரை பிடிக்கும் அளவுக்கான தொழில்நுட்பம் நம்மிடம்இல்லை. முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் அதுபோல செய்ய முடியும்.
2016-ம் ஆண்டு சென்னை கந்தன்சாவடி பொதுத்துறை வங்கி ஒன்றின்வாடிக்கையாளர்களின் கணக்கில்இருந்து ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட புகாரின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, ஹரியாணாவில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு, இதுபோன்ற மோசடிசம்பவத்துக்காக பெரிய அளவில்தனிப்படை எதுவும் அமைக்கப்படவில்லை.
நமது வங்கியில் இருந்து எடுக்கப்படும் பணத்தை டெபாசிட் ஆகும் வங்கியின் கணக்கு எண்ணை வைத்து அவரை பிடிக்கலாம் என்றாலும் அவை போலி முகவரியாக இருக்கிறது. மேலும் மோசடியாக திருடப்படும் பணம் ஒரு மணி நேரத்துக்குள் 7 வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படும். அவையும் போலியான முகவரி என்பதால் இந்த கும்பலை பிடிப்பது சிரமமான விஷயம்.
தமிழகத்தில் இதுபோன்று கொள்ளையடிக்கப்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்தி, கொள்ளையர்களை பிடிப்பதுகுறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர்.