Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

மக்கள் மன்ற நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் ரஜினி: அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகளை அறிவிக்க வாய்ப்பு

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடக்க உள்ள இந்த சந்திப்பில் அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகளை அவர் வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிச.31 -ல், தான்அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். அதன்பிறகு தொடர்ந்து சில மாதங்கள் மாவட்டம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு, இணைய வழியில் உறுப்பினர் சேர்க்கை, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது என அவரது செயல்பாடுகள் இருந்தன.

இதனை அடுத்து கடந்த மார்ச் மாதத்தில் பத்திரிகையாளர்கள் முன்பு பேசியபோது, ‘தான் அரசியலுக்கு வந்தாலும் முதல்வர் இல்லை. நல்லவர், நேர்மையானவர், அறிவாளியாக உள்ள ஒருவரை முதல்வராக அமர்த்தி ஒரு குழு ஆட்சிக்கு வழிகாட்டும்’ என்று ரஜினி தெரிவித்தார். இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிகம் வாய்ப்புதர உள்ளதாகத் தெரிவித்தார். அரசியலில் பணம் செலவழிப்பது இல்லாமல் மக்கள் அலை ஒன்று, எழுச்சி ஒன்று உருவாகவேண்டும், அதை ரசிகர்கள் உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், ‘அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம், இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை’ என சமூக வலைதளம் வழியே கருத்தும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்ததால் அவரது அரசியல் செயல்பாடுகளில் தொய்வு இருந்தது. மதுரை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட சில இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த தயாராகி வந்த நேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்ததால் அந்ததிட்டத்தை கைவிட்டார். இனி, அவரது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கும் எனவும் சிலமாவட்ட நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்துகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில் நாளை (நவ.30) சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த கூட்டத்தில் ரஜினிமக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்திக்கிறார். காலை 9 மணிக்கு தொடங்க உள்ள இந்த சந்திப்பில் தனது அரசியல் நுழைவு,நிலைப்பாடு பற்றிய தனது முடிவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகளை அவர் வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சில மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டபோது, ‘‘மாவட்டச் செயலாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு வந்திருக்கிறது. விரைவில் ரஜினியின் பிறந்தநாள் வர இருப்பதால் நாங்களே அது தொடர்பான செயல்பாடுகள் குறித்து கேட்டறிய ஆவலாக இருந்தோம்.

இந்நிலையில், ரஜினி தரப்பில் 30-ம் தேதி சென்னைக்கு வருமாறு அழைப்பு வந்திருக்கிறது. அவரது அடுத்தக்கட்ட அரசியல் நிலைப்பாடுகள் குறித்து இந்த சந்திப்புக்கு பிறகுதான் எங்களுக்கு தெரியவரும்’’ என்றனர்.

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்திக்கிறார். காலை 9 மணிக்கு தொடங்க உள்ள இந்த சந்திப்பின்போது தனது அரசியல் நுழைவு, அரசியல் நிலைப்பாடு பற்றிய தனது முடிவுகள் குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x