Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

இந்தியாவின் கலாச்சாரத்தைப் பேணிக் காப்பது நம் கடமை: பாரதிய வித்யா பவன் இசை விழா தொடக்க நிகழ்வில் ஆளுநர் கருத்து

இந்தியாவின் பெருமைக்குரிய கலாச்சார பாரம்பரியத்தைப் பேணிக் காக்க வேண்டியது நமது கடமை என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

பாரதிய வித்யா பவன், இந்திய கலாச்சார அமைச்சகத்தின் தென்மண்டல கலாச்சார மையத்துடன் இணைந்து நடத்தும் ‘பவன் கலாச்சார திருவிழா-2020’ தொடக்க விழா சென்னை பவன் ராஜாஜி வித்யாஸ்ரம் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்துப் பேசியதாவது: இந்திய கலாச்சாரம் மற்றும் அதன் மதிப்பீடுகளை பாதுகாத்து பிரபலப்படுத்துவதற்காக பாரதிய வித்யா பவன் 1938-ல் கே.எம்.முன்சியால் தொடங்கப்பட்டது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த கலாச்சார அமைப்பு, தற்போது பெரிய இயக்கமாக மாறி, இந்திய கலாச்சார விழுமியங்களை, கல்வி நிறுவனங்கள், இதழ்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மேம்படுத்தி வருகிறது. இந்திய கலாச்சார பாரம்பரியத்தைப் பேணிக் காக்க வேண்டியது நமது கடமை ஆகும் என்று ஆளுநர் கூறினார்.

பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திரா தலைவர் ‘இந்து’ என்.ரவி தலைமையேற்று பேசியதாவது:

பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திராவால் டிசம்பரில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியானது மிகப்பெரிய கலாச்சார திருவிழாவாகும். 100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்த இசை விழா யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்றது. இந்த ஆண்டு இசை நிகழ்ச்சி திறந்தவெளியில் நடத்தப்படுகிறது. கரோனா சூழல் காரணமாக, ரசிகர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு, சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிஉள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்ததற்காக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி. கர்னாடக இசை, பரதநாட்டியம் உள்ளிட்ட இந்திய கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் குறிப்பாக இளம் தொழில்முனைவோர் அதிகளவில் உதவி செய்து, நம் நாட்டின் சமூக, கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நானோ தொழில்நுட்பம்

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறும்போது, “நானோ தொழில்நுட்பம் பற்றி நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், கீழடி அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களில் இருந்த பல்வேறு வண்ணங்கள் 0.4 மீட்டர் அளவு கொண்ட மிகச்சிறிய டியூப்களைக் கொண்டு தீட்டப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. அப்படியென்றால் நமது கலாச்சாரம் 2,500 ஆண்டுகள் பழமையானது என்பதை நாம் அறிய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திரா துணைத் தலைவர் நல்லி குப்புசாமி செட்டி வரவேற்றார். இதன் இயக்குநர் கே.என்.ராமசாமி நன்றி கூறினார். தொடக்க விழாவைத் தொடர்ந்து கர்னாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசைத் திருவிழா இதே இடத்தில் டிசம்பர் 19-ம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x