

செங்கல்பட்டு அருகே பாலூர் தரைப்பாலத்தில் மழைநீர் செல்வதால் 10 கிராமங்களுக்கு இடையேயும், காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் பாலாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் மீதுவெள்ளநீர் பாய்வதால் 8 கிராமங்களுக்கு இடையேயும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், பாலூரை அடுத்த ரெட்டிப்பாளையம், குருவன்மேடு பகுதிகளில் உள்ள தரைப்பாலம் வழியாக ரெட்டிப்பாளையம், குருவன்மேடு, வேண்பாக்கம் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
நிவர் புயல் காரணமாக தென்னேரி உபரிநீர் வெளியேறுவதையொட்டி இத்தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்களால் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட பிற இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தென்னேரி உபரிநீர் வடக்குப்பட்டு, குருவன்மேடு வழியாக வந்து, இத்தரைப்பாலத்தின் கீழே சென்று பாலாற்றில் கலக்கிறது. தற்போது அதிகப்படியான உபரிநீர் வெளியேறுவதால் இத்தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பழமையான தரைப்பாலம் இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், தண்ணீர் வடிந்த பிறகு தரைப்பாலத்தை இடித்துவிட்டு உயர்மட்ட பாலம் அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வாலாஜாபாத் தரைப்பாலத்தில்
ஆந்திர மாநிலத்தில் பெய்த மழையால் பாலாற்றில் வேலூர்பகுதிக்கு அதிக நீர் வந்ததைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள கதவணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டது. இந்நீர் காஞ்சிபுரம் மாவட்டத்தை வந்தடைந்ததால் பாலாற்றில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தற்போது வாலாஜாபாத்தில் உள்ள பாலாற்று பாலத்தின் மீதுவெள்ளநீர் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவளூர், தம்மனூர், கண்ணடியன் குடிசை, இளையனார் வேலூர் உட்பட 8 கிராமங்களுக்கிடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தற்போது நீரின் அளவுபடிப்படியாக குறைந்து வருவதால் விரைவில் இந்தப் பகுதியில்போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என காவல் துறை தரப்பில் தெரிவித்தனர்.