

காஞ்சி மாவட்டம், ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள அம்மணம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து 200 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஊராட்சி சார்பில் சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நிவர் புயல் காரணமாக அம்மணம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால், ஏரிப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தங்கள் வீடுகளுக்குள் நீர் புகுவதை தடுக்கஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் நீர்வரத்துப் பகுதியில் உள்ள கரையை 2 இடங்களில் தற்போதுஉடைத்துள்ளனர்.
உடைக்கப்பட்ட ஏரிக்கரை வழியே, மழைநீர் முழுவதும் படப்பை ஏரிக்கு சென்று அந்த ஏரியும் நிரம்பி, ஒரத்தூர் அருகே தொடங்கும் அடையாறு கிளை கால்வாய் வழியாக சென்று கடலில் வீணாக கலக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காணாமல் மவுனமாக இருப்பதாகவும், ஒன்றிய நிர்வாகம்உடைப்பை சரிசெய்யவில்லை எனவும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: நிவர் புயலால் ஏற்பட்ட மழையினால் ஒரத்தூர் ஆரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியை மீண்டும் உடைத்துள்ளனர்.
அம்மணம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீட்டினருக்கு ஆதரவாக ஆளும்கட்சியினரும், குன்றத்தூர் ஒன்றியஅதிகாரிகளும் செயல்படுகின்றனர். அம்மணம்பாக்கம் ஏரியில் தேங்க வேண்டிய நீர் அடையாறு கிளையாற்றில் கலந்து வீணாககடலில் சேர்வதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.