

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கடந்த 2019 ஜனவரி 8-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதையடுத்து கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் என 2 வருவாய் கோட்டங்கள் உள்ளடக்கிய மாவட்டம் பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, கல்வராயன் மலை (புதியது) என 6 வருவாய் வட்டங்களும், திருக் கோவிலூர், சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், வடக்கனந்தல், மணலூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை என 7 பேரூராட்சிகளும் இடம்பெறும் வகையில் புதிய மாவட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியராக கிரண்குராலா, வருவாய் அலுவ லராக சங்கீதா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து மாவட்டத்திற்கான தற்காலிக அலுவலகக் கட்டிடம் தேர்வு செய்யப்பட்டு, வாகன வசதியும் வழங்கப்பட்டு மாவட்டம் தனித்து இயங்கி வருகிறது.
புதிய மாவட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் வீரசோழபுரத்தில் நடைபெற்றது.
மாவட்டம் பிரிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில் சில முக்கியத் துறைகள் பிரிக்கப்படாமல் தொடர்ந்து விழுப்புரத்திலேயே இயங்கி வருகின்றன.
அத்துறைகள் தொடர்பாக முடிவெடுப்பதில் தாமதம் நிலவுகிறது.
அதுதொடர்பான பயனாளிகள் மற்றும் முறையீட்டாளர்களும் தொடர்ந்து விழுப்புரத்துக்கே செல்லும் நிலை உள்ளது.
சார் கருவூல அலுவலகங்கள் அந்தந்த பகுதியில் இயங்கினாலும், முறையீடு தொடர்பாக விழுப்புரத்தில் இயங்கும் மாவட்டக் கருவூல அலுவலகத்துக்கு செல்ல வேண்டியிருப்பதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆனந்தகிருஷ்ணனிடம் கேட்டபோது, “20 பணியாளர்கள் பணியிடம் நிரப்பபடவில்லை. இதனால் மற்ற பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது.
குரூப்-4 நிலையிலான பணியிடங்கள் நிரப்பப்பட்ட போதிலும், குரூப்-2 மற்றும் குரூப்-1 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதேபோல் மாவட்டத்தில் துறைசார் அலுவலகங்கள் இயங்கி னாலும், தலைமை அலுவலருடன் கூடிய அலுவலகம் இயங்கினால் தான் முடிவுகள் விரைந்து எடுக்க முடியும். பயனாளிகளும், முறையீட்டாளர்களும் பயன் பெறுவர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலம் விடுபட்ட துறைகள், அலுவலகங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். விரைந்து அவை இயங்கத் தொடங்கும்” என்றார்.