

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைக் கிராமத்துக்குச் சாலை வசதியின்றி அங்கு உடல்நலம் பாதித்தவர்களை, கிராம மக்கள் டோலி கட்டித் தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நத்தம் அருகேயுள்ள மலைக்கிராமம் லிங்கவாடி ஊராட்சியிலுள்ள மலையூர். இங்கு நூறாண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வந்த நிலையில், தற்போது 250 குடும்பங்களைச் சேர்ந்த 1,500 பேர் உள்ளனர். விவசாயமே முக்கியத் தொழில்.
இந்த மலைக் கிராமத்துக்கு சுமார் 5 கி.மீ. மலைப் பாதையில் கரடு முரடான ஒற்றையடி பாதை யில் நடந்து செல்ல வேண்டும். இக்கிராம மக்கள் தங்கள் ஊருக்கு சாலை அமைத்துத் தர நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் படிக்கின்றனர்.
இவர்கள் மலைப் பாதையில் பல கி.மீ. நடந்து தினமும் பள்ளி சென்று வருவது வேதனையானது. மலைப் பகுதியில் விளையும் பொருட்களை குதிரைகள் மூலமே கீழ்ப்பகுதிக்குக் கொண்டு வருகின்றனர். இதனால் விவசாயி களுக்கு இழப்பு ஏற்படுகிறது. பிரசவக் காலங்களில் கர்ப்பிணிகளை டோலி கட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வருகின்றனர்.
கடந்த 2017 முதலே, வனப்பகுதி யில் சாலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மலையூர் கிராமத்தில் நேற்று உடல் நலம் பாதித்த ஒருவரை அவசரச் சிகிச்சைக்காக டோலி கட்டி தூக்கிக் கொண்டு நத்தம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வித்யாவிடம் கேட்டபோது, மலையூருக்குச் செல்லும் ஐந்து கி.மீ. மலைப்பாதையில் சுமார் 2.5 கி.மீ. தூரம் வரை வனப்பகுதியினுள் செல்ல வேண்டும்.
வனம் அல்லாத பணிகளுக்கு வனப்பகுதியை பயன்படுத்தும் போது மத்திய அரசின் அனுமதி பெறவேண்டும்.
மலையூர் மலைகிராமத்துக்குச் சாலை அமைக்க அனுமதி கோரி கடந்த ஆண்டு விண்ணப்பிக் கப்பட்ட நிலையில், கடந்த மார்ச்சில் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இனி சாலை அமைப்பதற்காகன பணிகளை மாநில அரசு முன்னெடுக்கும் வாய்ப்புள்ளது என்றார்.