Published : 23 Oct 2015 08:09 AM
Last Updated : 23 Oct 2015 08:09 AM

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சூரசம்ஹார விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோயில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த் தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் ஏராள மான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

10 ம் திருநாளான நேற்று காலை 5 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆதாரனைகள் நடைபெற்றன. கடற்கரையில் நள்ளிரவு நடைபெற்ற சூரசம்ஹாரத் துக்காக தூத்துக்குடி, திருநெல் வேலி, கன்னியாகுமரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேடமணிந்த பக்தர்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரப்பட்டினத்தில் குவிந் தனர். பக்தர்கள் வசதிக்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து குலசேகரப் பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தலைமையில் போலீ ஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண நேற்று முன்தினம் முதலே பக்தர்கள் குலசேகரப்பட்டினம் வரத்தொடங்கினர். பைக், கார், வேன், மினி லாரி, லாரி என பல்வேறு வாகனங்களில் வந்த பக்தர்களால் திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், உடன்குடி ஆகிய பகுதிகளில் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

பக்தர்கள் வாகனங்களை நிறுத்து வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த தருவைக்குளம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் நேற்று காலையே நிரம்பி வழிந்தன. சிலர் உடன்குடியில் தங்கள் வாகனங்களை நிறுத்தினர்.

நேற்று நள்ளிரவில் அம்மன் போர்க்கோலம் பூண்டு, குலசேகரப் பட்டினம் கடற்கரைக்கு எழுந்தரு ளினார். அங்கு இரவு 1 மணியளவில் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். கடற்கரையில் எங்கு பார்த்தாலும் கூட்டம் அலை மோதியது. தொடர்ந்து மிகப்பெரும் வாணவேடிக்கை நடைபெற்றது.

சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆரா தனைகள் நடந்தன. அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோயிலுக்கு எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் முடிந்து, திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் வந்தடைந்தார்.

இன்று காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதி உலா புறப்படுதல், மாலையில் அம்மன் கோயில் வந்து சேருதல், மாலை 6 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் ஆகியவை நடக்கின்றன. 12 ம் திருநாளான நாளை காலையில் அபிஷேக ஆராதனைகள், மதியம் சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x