

திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்பட்ட வாராந்திர ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருநெல்வேலி, கன்னியா குமரி, செங்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப் படும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கம். இந்த ரயில்களில் சாதாரண நாட்களிலேயே இடம் கிடைப்பது அரிதாக இருக்கும். பண்டிகைக் காலங்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்கள் அனைத்தும் காலியாகிவிடுவது வழக்கம். இதனால், ரயில்களில் இடம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ரயில்களில் இடம் கிடைத்தாலும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திருநெல்வேலி, தென்காசி போன்ற நகரங்களுக்கு பேருந்தில் சென்று, ரயில் நிலையத்தை அடைவதற்குள் நெரிசலில் சிக்கி ரயில்களை தவற விடுவதும் வாடிக்கையாக இருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, பாம்புக்கோவில் சந்தை, திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக தாம்பரத்துக்கு வியாழக்கிழமைகளில் வாராந்திர ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயில் நீண்ட தூரம் சுற்றிச் சென்றாலும் மற்ற ரயில்களில் இடம் கிடைக்காத நிலை ஏற்படும்போது, இந்த ரயிலை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி, தென்காசி ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
எனவே, திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப் பட்ட வாராந்திர ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று திருநெல் வேலி, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இயக்குவதில் சிக்கல்
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “திருநெல்வேலி ரயில் நிலையத் தில் 3 நாட்கள் காலியாக நிறுத்தி வைக்கப்படும் திருநெல் வேலி- பிலாஸ்பூர் அல்லது திருநெல்வேலி- தாதர் ரயிலின் பெட்டிகளைக் கொண்டே இந்த திருநெல்வேலி- தாம்பரம் வாராந்திர ரயில் இயக்கப்பட்டது. எனவே, இந்த ரயில்களில் ஏதாவது ஒன்று இயக்கப்பட்டால் தான் திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர ரயிலை இயக்க முடியும்.
கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்போது திருநெல் வேலி- தாம்பரம் வாராந்திர ரயிலை இயக்க வாய்ப்பு உள்ளது” என்றனர்.