Published : 28 Nov 2020 08:13 PM
Last Updated : 28 Nov 2020 08:13 PM

டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து டிச.2-ல் ஆர்ப்பாட்டம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லியில் விவசாயிகள் மீதான கொடூரமான தாக்குதலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தாக்குதல் நடத்திய மத்திய பாஜக அரசை கண்டித்து டிசம்பர் 2-ல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களையும், மின்சார திருத்த மசோதா 2020-ஐயும், தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்டங்களையும் ரத்து செய்திடக் கோரி நவம்பர் 26-ம் தேதி அன்று நடைபெற்ற நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் எழுச்சியாக நடைபெற்றது. நாடு முழுவதும் விவசாயிகள் சாலைமறியல் பேரணி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

நவம்பர் 27-ல் தலைநகர் டெல்லியில் பாராளுமன்றம் முன்பு ஜந்தர்மந்தரில் விவசாயிகள் பேரணி போராட்டத்தை நடத்திட பஞ்சாப், அரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்கள் மற்றும் ஊர்வலமாக சென்றனர். டெல்லி எல்லையிலிருந்து 80 கி.மீ வரை பேரணி அணிவகுத்து நின்றது.

விவசாயிகளின் டெல்லி பேரணிக்கு அனுமதி மறுத்து மத்திய பாஜக அரசு பேரணிக்கு வருபவர்களை தடுத்தது. நூற்றுக்கணக்கான தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். உத்திரபிரதேசம், அரியாணா மற்றும் டெல்லி காவல்துறையினர் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி கண்ணீர் புகை குண்டுகளை சுட்டு, தண்ணீரை பீச்சி விவசாயிகள் மீது தாக்குதல் தொடுத்தனர்.

இந்திய விவசாயத்தை அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்க அனுமதிக்க மாட்டோம். விவசாயத்தை, விவசாயிகளை காப்போம் என விவசாயிகள் தடைகளை அடக்குமுறைகளை முறியடித்து முன்னேறி சென்றனர். இறுதியில் டெல்லியில் விவசாயிகள் பேரணிக்கும் போராட்டத்திற்கும் மத்திய பாஜக அரசு, டெல்லி அரசு அனுமதி அளித்தது.

பலமாதங்களுக்கு முன்பாகவே டெல்லியில் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்தும், விவசாய சங்க தலைவர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாமல், தற்போது காவல்துறையினரை ஏவி விட்டு விவசாயிகள் மீதான கொடூரமான தாக்குதலை மத்திய பாஜக அரசு அராஜக போக்கில் ஈடுபட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

டிசம்பர் 2-ல் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய பாஜக அரசை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020 - வேளாண் விளை பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசர சட்டம் 2020 - விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவை அவசர சட்டம் 2020 - மின்சார திருத்த சட்ட மசோதா 2020 மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய பாஜக அரசு உடனடியாக ரத்து செய்திடக்கோரி டிசம்பர் 2 அன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுகிறது .

காவல் துறையின் தடைகளை தகர்த்து டெல்லிக்கு முன்னேறியுள்ள விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் தங்கள் பேராதரவையும், ஒற்றுமையும் வெளிப்படுத்தும் விதமாக டிசம்பர் 2 கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்”.
இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x