கரோனாவால் சரிந்த கோவை விமானப் பயணிகளின் எண்ணிக்கை 2 மாதங்களில் உயர்வு: கோவை- அகமதாபாத் நேரடி விமானத்துக்கு வரவேற்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனாவுக்குப் பிறகு கோவை விமான நிலையத்தில் சரிவடைந்த விமான பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து முந்தைய சராசரியில் 30 சதவீத அளவை எட்டியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை தடை செய்யப்பட்டது. கடந்த மே மாத இறுதி முதல் வெளி மாவட்ட, மாநிலங்களில் தவிக்கும் நபர்களுக்காகக் குறைந்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட விமான சேவைகள் மட்டும் மீண்டும் இயக்கப்பட்டன. கரோனா அச்சம் காரணமாக விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கையும் குறைவாக இருந்து வந்தது. இந்நிலையில், படிப்படியாக விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோவை விமான நிலையத்தைக் கடந்த மே மாதம் 4,511 பேர், ஜூன் மாதம் 28,314 பேர், ஜூலை மாதம் 30,644 பேர், ஆகஸ்ட் மாதம் 44,786 பயணிகள் பயன்படுத்தி இருந்தனர். இந்நிலையில், இந்த எண்ணிக்கையானது செப்டம்பர் மாதம் 66,792 பயணிகளாகவும், அக்டோபர் மாதத்தில் 76,470 பயணிகளாகவும் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாகக் கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ’’கரோனாவுக்கு முன்புவரை கோவை விமான நிலையத்தை ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் பயன்படுத்தி வந்தனர். மாதந்தோறும் சராசரியாக 2.50 லட்சம் பேர் பயன்படுத்தி வந்தனர். கரோனாவின் தாக்கத்துக்குப் பிறகு, தடைபட்ட தொழில்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதால் தற்போது 30 சதவீத எண்ணிக்கையை அடைந்துள்ளோம். சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டபிறகு பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். தற்போது சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, அகமதாபாத் ஆகிய இடங்களில் இருந்து 15 விமானங்கள் தினந்தோறும் கோவை வந்து செல்கின்றன.

கரோனாவுக்கு முன்பு அகமதாபாத்துக்குக் கோவையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. இதனால், சென்னை, பெங்களூரு வழியாகப் பயணிகள் சென்று வந்தனர். அந்த சிரமத்தைத் தவிர்க்க தற்போது நேரடி விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேரம் குறைவதால் அந்த விமானத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சரக்குகளைக் கையாள்வதைப் பொறுத்தவரை கடந்த மே மாதம் 6.3 டன்னாக இருந்த அளவு, அக்டோபர் மாதம் 1406 டன்னாக அதிகரித்துள்ளது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in