

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 2 கி.மீ., நடந்து சென்று வெள்ள பாதிப்பை கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பார்வையிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையாலும், நவ.26-ம் தேதி இரவு பெய்த மழையாலும் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
இதில் கல்லல் ஒன்றியத்தில் 10 வீடுகள், காளையார்கோவிலில் 22 வீடுகள், சிவகங்கையில் 25 வீடுகள் என 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன.
மேலும் காளையார்கோவில் அருகே காஞ்சிப்பட்டி ஊராட்சி ஒருபோக்கி கிராமத்தில் கண்மாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உடைப்பை சரி செய்ய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அமைச்சர் ஜி.பாஸ்கரன் கண்மாய் உடைப்பு மற்றும் வெள்ளப் பாதிப்பை பார்வையிட சென்றார். கண்மாய்க்கு வாகனம் செல்ல வழியில்லாததால் 2 கி.மீ. நடந்து சென்று அமைச்சர் பார்வையிட்டார்.
பிறகு வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளுக்கு புகாமல் இருக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் வீடு இடிந்த 7 குடும்பத்தினருக்கு தனது சொந்த பணம் ரூ.5 ஆயிரம், அரசு நிதி ரூ.5 ஆயிரம் என தலா ரூ.10 ஆயிரமும், 10 கிலோ அரிசியும் வழங்கினார்.
இதேபோல் சிவகங்கை ஒன்றியத்திலும் வீடு சேதமடைந்தவர்களுக்கு தனது சொந்த பணத்தை வழங்கி வருகிறார். தமறாக்கி வடக்கு, கோமாளிப்பட்டியில் 3 மாடுகள் இறந்தன. மாட்டின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்கினார்.