Published : 28 Nov 2020 18:07 pm

Updated : 28 Nov 2020 18:07 pm

 

Published : 28 Nov 2020 06:07 PM
Last Updated : 28 Nov 2020 06:07 PM

போராடும் டெல்லி விவசாயிகள் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும்: திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை

opposition-parties-including-the-dmk-must-drop-the-crackdown-on-struggling-delhi-farmers

சென்னை

விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் புதுடெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குறைகளைக் கைவிட வலியுறுத்தியும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதரக் கோரியும் திமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்திய வேளாண்துறையை கார்பரேட் மயமாக்கும் வகையிலும், இந்திய விவசாயத்தை அழிக்கும் வகையில் புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக விவசாய சங்கத்தினர், எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றனர்.


டெல்லி நோக்கி வடமாநில விவசாயிகள் போராட்டம் நடத்த லட்சக்கணக்கில் டெல்லி நோக்கி குவிந்து வருகின்றனர். அவர்களை அச்சுறுத்தி விரட்ட டெல்லி போலீஸார் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் விவசாயிகளுக்கு போராட இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுடெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குறைகளைக் கைவிட வலியுறுத்தியும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதரக் கோரியும் திமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்த கூட்டறிக்கையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, ராஷ்ட்ரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, சிபிஐ-எம்எல் கட்சியின் பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேபப்ரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

எதிர்க்கட்சியினர் விடுத்துள்ள கூட்டறிக்கை வருமாறு:

“கடுமையான அடக்குமுறை, கண்ணீர் புகை குண்டு வீச்சு, பெரிய தீயணைப்பு குழாய்கள் மூலம் தண்ணீர் பீச்சியடிப்பு, சாலையில் தடை, போலீஸார் சாலைத்தடுப்புகள் அமைத்து விவசாயிகளுக்கு எதிராக நடத்திய அடக்குமுறை போரை தொடங்குவது போன்று உள்ளது.

லட்சக்கணக்கான விவசாயிகள் வெற்றிகரகமாக டெல்லியை அடைந்துவிட்டார்கள், அவர்களது தைரியத்துக்கும் துணிவுக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். பிற்போக்குத்தனமான விவசாய கொள்கையை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.

போராடும் விவசாயிகள் அமைதியாக தங்கள் கோரிக்கையை வைக்க டெல்லி நோக்கி வந்த உங்களை தடுக்க முயன்ற மத்திய அரசின் நடைமுறையை பின் வாங்கச்செய்து இன்று ஒரு இடத்தில் போராட அனுமதி பெற்ற வலிமையை பாராட்டுகிறோம்.

அதே நேரம் தற்போது கொடுக்கப்பட்டுள்ள மைதானம் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட இடமில்லாத வகையில் நெருக்கடியான ஒன்று. ஆகவே போராடும் விவசாயிகளுக்கு டெல்லி ராம்லீலா மைதானத்தை போன்ற பெரிய மைதானம் அல்லது ராம்லீலா மைதானத்தை ஒதுக்கி அவர்கள் அமைதியாக போராட வேண்டிய உணவு, தங்குமிடம் உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.

உணவுப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும், குறைந்தப்பட்ச ஆதார விலை நீக்கிய, இந்திய வேளாண் துறையை, உணவு வழங்குகிற விவசாயிகளை அழிக்கும் புதிய விவசாய கொள்கையை எதிர்க்கிறோம் என்பதை மீண்டும் பதிவு செய்கிறோம். அதே வேளையில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க மத்திய அரசு முன்வரவேண்டும்”.

இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

தவறவிடாதீர்!


Opposition partiesIncluding the DMKMust drop the crackdown on struggling Delhi farmersபோராடும் டெல்லி விவசாயிகள்மீதான அடக்குமுறைகைவிட வேண்டும்திமுகஎதிர்க்கட்சிகள்கூட்டறிக்கை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x