Last Updated : 28 Nov, 2020 06:10 PM

 

Published : 28 Nov 2020 06:10 PM
Last Updated : 28 Nov 2020 06:10 PM

நெல்லையில் நீரேற்று நிலையங்களை கண்காணிக்கும் ஸ்கேடா கருவிகள் பாரமரிப்புக்கு 10 ஆண்டுகளில் ரூ.208 கோடி செலவு: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்

திருநெல்வேலியில் நீரேற்று நிலையங்கள், நீர்தேக்க தொட்டிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட தானியங்கி ஸ்கேடா கருவிகளின் பராமரிப்புக்கு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.208 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

நீரேற்று நிலையங்களின் பணிகள், மேல்நிலை நீர்தேத்க்க தொட்டிகளில் உள்ள தண்ணீரின் அளவு, அவற்றில் எவ்வளவு தண்ணீரை எத்தனை குடிநீர் இணைப்புகளுக்கு பகிர்ந்தளிப்பது, குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு கண்காணிப்பு பணிகளுக்காக ஸ்கேடா என்ற தானியங்கி அளவீடு கருவிகள் கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.2.58 கோடி செலவில் அமைக்கப்பட்டன. திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டல அலுவலகங்கள், கொண்டாநகரம், சுத்தமல்லி, திருமலைக்கொழுந்துபுரம் ஆகிய நீரேற்று நிலையங்கள், 13 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றில் இத்தகைய கருவிகள் பொருத்தப்பட்டன.

செயற்கைக்கோள் துணையுடன் செயல்படும் இந்த கருவிகள் மூலம் நீரேற்று நிலையத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு வந்து சேரும் நீரின் அளவு, மக்களுக்கு விநியோகிக்கப்படும் நீரின் அளவு உள்ளிட்டவற்றை அறிய முடியும். மேலும் நீர்த்தேக்க தொட்டி நிறைந்துவிட்டாலோ அல்லது குழாயில் உடைப்பு ஏற்பட்டாலோ மோட்டார் தானாக நின்றுவிடும் வகையில் இந்த கருவியின் செயல்பாடு அமைந்திருந்தது. இவற்றை 4 மண்டல அலுவலகங்களில் இருந்தும், மாநகராட்சி அலுவலகத்திலிருந்தும் கண்காணிக்க போதுமான உபகரணங்கள் நிறுவப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த கருவிகள் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி வழக்கறிஞர் அ. பிரம்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தில், இந்த ஸ்கேடா கருவிகள் தொடர்பான விவரங்களை கேட்டிருந்தார். அதற்கு மாநகராட்சி நிர்வாகம் அளித்துள்ள பதிலில் கடந்த 10 ஆண்டுகளில் ஸ்கேடா கருவி பராமரிப்புக்கு ரூ.208 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், கருவிகள் செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரம்மா கூறும்போது, 4 மண்டல அலுவலகங்களில் தகவல்களை பெறுவதற்கான அமைக்கப்பட்டுள்ள டிஷ் ஆண்டனா சேதமடைந்திருக்கின்றன. மேலும் மண்டல அலுவலகங்களில் விசாரித்தபோது அங்கு அவ்வித கண்காணிப்பு பணிகளும் நடைபெறவில்லை என்று கூறுகிறார்கள். மாநகராட்சி மைய அலுவலகத்தில் இதுபோன்ற அமைப்புகள் உள்ளதா என்பதும் உறுதியாக தெரியவில்லை.

இதனிடையே ஸ்கேடா கருவிகளை பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைகழகம் 3 ஆண்டுகளுக்கு ரூ. 60 லட்சம் செலவாகியுள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்தக் கருவிகளின் பராமரிப்பு பணிகளுக்காக திருநெல்வேலியை சேர்ந்த பொறியியல் பட்டாதாரிகளை பணியில் நியமித்தால் அவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x