Last Updated : 28 Nov, 2020 05:46 PM

 

Published : 28 Nov 2020 05:46 PM
Last Updated : 28 Nov 2020 05:46 PM

நடுக்கடலில் ரூ.500 கோடி ஹெராயின் சிக்கிய வழக்கு: இலங்கையை சேர்ந்த 6 பேரும் புழல் சிறையில் அடைப்பு- காவலில் எடுத்து விசாரிக்க என்சிபி முடிவு

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் ரூ.500 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 6 பேரும் நள்ளிரவில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) முடிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடிக்கு தெற்கே கன்னியாகுமரியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் எல்லையையொட்டிய இந்திய கடல் பகுதியில் ஏராளமான போதைப் பொருட்களுடன் இலங்கையை சேர்ந்த படகை இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 25-ம் தேதி மடக்கிப் பிடித்தனர்.

அந்த படகில் ரூ.500 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹெராயின் மற்றும் 20 சிறிய பெட்டிகளில் சிந்தட்டிக் போதைப் பொருட்கள் இருந்தன. மேலும் 5 நவீன துப்பாக்கிகள், சேட்டிலைட் போன் உள்ளிட்டவைகளும் அந்த படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த படகில் இருந்த இலங்கை நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த நீந்து குலசூரிய சாத்தமனுவேல் (40) மற்றும் வான குலசூரிய ஜீவன் (30), சமீரா (32), வர்ண குலசூர்யா மனுவேல் ஜீவன் பிரசன்னா (29), நிசாந் கமகே (46), லட்சுமணகுமார் (37) ஆகிய 6 பேரையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

தீவிர விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட 6 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட படகு, போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்டவைகளையும் கடலோர காவல் படையினர், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் 2 நாட்களாக தூத்துக்குடியில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த விசாரணைக்கு பிறகு 6 பேரையும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று இரவு 8 மணியளவில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு நள்ளிரவு 11 மணி வரை முழுமையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து நள்ளிரவு 11 மணிக்கு மேல் 6 பேரையும் தூத்துக்குடி 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் உமாதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து 6 பேரையும் டிசம்பர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உமாதேவி உத்தரவிட்டார். நீதிமன்ற நடைமுறைகள் முடிந்து இன்று அதிகாலை 1 மணியளவில் 6 பேரையும் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி மாவட்ட சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களை இரவு மட்டும் காவலில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வெளிநாட்டினரை சிறையில் அடைக்கும் வசதி சென்னை புழல் சிறையில் மட்டுமே உள்ளது. எனவே 6 பேரையும் சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக இன்று காலை 9.30 மணியளவில் பேரூரணியில் இருந்த பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

இலங்கையை சேர்ந்த 6 பேரையும் தங்கள் காவலில் எடுத்து விரிவான விசாரணை நடத்த மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மதுரையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஓரிரு நாளில் மனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x