வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவன ஊழியா்கள் தீபாவளி போனஸ் வழங்கக்கோரி திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவன ஊழியா்கள் தீபாவளி போனஸ் வழங்கக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சனிக்கிழமை திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் 1500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஒப்பந்த மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இங்கு கடந்த ஆண்டு இரண்டு கட்டமாக போனஸ் தொகை வழங்கப்பட்டது.
நிகழ்வாண்டு தீபாவளி போனஸ் வழங்கக்கோரி தொழிலாளா்கள் கண்டன ஆர்ப்பாட்டம், கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம், சாலை மறியல், அரை நிர்வாண நாமம் போடும் போராட்டமும் எனப் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தின் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்கத்தின் தலைவா் கே.பச்சமால் தலைமையேற்றார். பொதுச்செயலாளர் வி.குமரவடிவேல், பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி கண்டன உரையாற்றினார்.
பல்வேறு போராட்டங்களிலும் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் முன்வராததால் டிசம்பர் 3ம் தேதியிலிருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தேதி அறிவிக்காமல் அடுத்த கட்ட போராட்டம் நடத்த இருப்பதாக அரசு உப்பு நிறுவன ஊழியா்கள் கூறிவிட்டு கலைந்து சென்றனா்.
