

நிவர் புயலால் மனித உயிரிழப்புகள் எதுவும் இல்லாமல் முன்னெச்சரிக்கையுடன் சிறப்பாக செயல்பட்ட வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக பாராட்டினார்.
நிவர் புயல் பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக இன்று (நவ. 28) பேசினார். இதில், நிவர் புயல் பாதிப்பில் இருந்து மனித உயிரிழப்புகள் எதுவும் நிகழாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களை முதல்வர் பழனிசாமி பாராட்டினார். மேலும், வேலூர் மாவட்டம் கவுன்டன்யா ஆற்றில் இரவு நேரத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க துரிதமாக செயல்பட்டதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தை முதல்வர் பாராட்டினார்.
நிவர் புயல் நிவாரண பணிகள் தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறும்போது, "பாலாற்றுக்கு முக்கிய நீராதாரமாக இருக்கும் கவுன்டன்யா, பொன்னையாறு இரண்டும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து உற்பத்தியாகிறது. அங்கு எவ்வளவு மழைப்பொழிவு,ஆற்றில் எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது என்ற தகவல் கொடுப்பதில்லை. எனவே, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் உதவியுடன் சித்தூர் மாவட்ட மழை நிலவரத்தை கணித்து இங்கு திட்டமிட்டோம்.
கவுன்டன்யா ஆற்றில் கடந்த 1991-ம் ஆண்டு 2,700 கன அடி தண்ணீர் வந்துள்ளதுதான் அதிகபட்ச நீர்வரத்து அளவாக இருக்கிறது. இந்த அளவைவிட கூடுதலாக கவுன்டன்யா ஆற்றில் நீர்வரத்து இருப்பதை தெரிந்தது கொண்டதும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினோம்.
கவுன்டன்யா ஆற்றின் கரையோரங்களில் உள்ள 22 கிராம ஊராட்சிகள், குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட வருவாய், ஊரக வளர்ச்சித் துறையினர் துரிதமாக செயல்பட்டனர். பெருவெள்ளம் ஏற்பட்ட 4 மணி நேரத்தில் 682 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினோம். வரும் காலங்களில் சித்தூர் மாவட்டத்தின் மழையளவு மற்றும் பொன்னையாற்றில் உபரிநீர் வெளியேற்றம் தொடர்பான தகவலை அளிக்கும்படி அம்மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன்" என்றார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறும்போது, "புயல் பாதிப்பை எதிர்கொள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 4,000 பேரை 24-ம் தேதியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தோம். மழை தொடங்கியதும் மொத்தம்167 மையங்களில் 6,156 பேரை தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத், சிறப்பாக செயல்பட்டு அதிகமானவர் நபர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தார். பாலாறு, பொன்னையாற்றில் இருந்து வெளியேறும் நீர்வரத்தையும் தொடர்ந்து கண்காணித்து செயல்பட்டோம்" என்று தெரிவித்தார்.