Last Updated : 28 Nov, 2020 03:48 PM

 

Published : 28 Nov 2020 03:48 PM
Last Updated : 28 Nov 2020 03:48 PM

மதுரை செல்லூரில் குடியிருப்புக்குள் நுழைந்த கழிவு நீர் நுரையால் மக்கள் அச்சம்: நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தல்

மதுரை செல்லூர் பகுதியில் குடியிருப்புக்குள் நுழைந்த கழிவு நீர் நுரையால் மக்கள் அச்சமடைந்தனர். செல்லூர் பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் கட்சியினர் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தினர்.

மதுரை நகர், மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. வைகை ஆற்றில் நீர வரத்தும் அதிகரித்த நிலையில், யானைக்கல் அருகிலுள்ள தடுப்பணையில் ஆகாயத்தாமரை செடிகள் குவிந்து, தண்ணீரும் நுரையாக பொங்கியது.

இதனிடையே செல்லூர் கண்மாயில் இருந்து வைகை ஆற்றுக்குச் செல்லும் கால்வாயிலும் நுரை பொங்கி, கண்மாயின் முகத்துவாரப் பகுதியான மீனாட்சிபுரம் உள்ளிட்ட இடங்களிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையத் துவங்கியது.

கழிவு கலந்து பொங்கிய நுரை சாலைகளுக்கும் வந்தது. அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படும் சூழலினால் மக்கள் மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத் துறை, காவல்துறை யினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்குச் சென்று கால்வாயில் தேங்கிய ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

பல கோடி ரூபாயில் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க, திட்டங்கள் செயல்படுத்தினாலும் ஆற்றில் கழிவு நீர் அல்லது வேறு ரசாயன கழிவால் இது போன்ற நுரை பொங்குகிறதா என, சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

வைகை ஆறு, செல்லூர் கண்மாயில் சேர்ந்த கழிவுகளால் இது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது. முறையாக ஆறு, கண்மாயை தூர்வாரவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியில் கழிவு நீர், நுரை பொங்கி எழுவதை மாநகர் காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ‘‘ செல்லூர் கண்மாயை முறையாகத் தூர்வாரவில்லை. கண்மாயில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகமாக படர்ந்துள்ளன. மேலும், கண்மாயிக்குள் கழிவுகளும் கொட்டப்படுவதால் நீரில் கழிவு கலந்து நுரையாக மாறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் தூர்வாருகிறோம் என, கணக்கு காட்டி, அப்பணியை முறையாக செய்யவில்லை. கரோனா தொற்று காலத்தில் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் நுரையாகி வரும்போது, பிற நோய்த் தொற்று அபாயமும் உள்ளது.

இது புதிய தொற்றுகளுக்கும் வழிவக்கும்.செல்லூர் கண்மாயை துார்வாரி சீரமைப்போம் என, தேர்தல் வாக்குறுதி அளித்த அதிமுக, முறையாக தூர்வாரவில்லை என்பது இது போன்ற நிகழ்வுகளால் வெளிப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் வேளையில் இனிமேலும், கண்மாயை முழுமையாக தூர்வார வாய்ப்பில்லை,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x