கவுன்டன்யா ஆற்றின் தீவுப் பகுதியில் சிக்கிய பெண் மீட்பு; தேசிய பேரிடர் மீட்புப் படையால் மீட்கப்பட்டார்

கவுன்டன்யா ஆற்றில் சிக்கியிருந்த எல்லாம்மாள் மீட்கப்பட்ட நிலையில் அவருக்கு மீட்புக் குழுவினர் தண்ணீர் கொடுத்து உதவினர்.
கவுன்டன்யா ஆற்றில் சிக்கியிருந்த எல்லாம்மாள் மீட்கப்பட்ட நிலையில் அவருக்கு மீட்புக் குழுவினர் தண்ணீர் கொடுத்து உதவினர்.
Updated on
2 min read

குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றின் நடுவில் இருந்த தீவுப்பகுதியில் வெள்ளநீரில் சிக்கியிருந்த பெண், ட்ரோன் உதவியுடன் கண்டறியப்பட்டு தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டார்.

வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலின் தாக்கத்தால் கன மழை பெய்தது. தமிழக ஆந்திர எல்லையில் உள்ள கவுன்டன்யா வனப்பகுதியில் அதி கன மழை பெய்ததால் கவுன்டன்யா ஆற்றில் கடந்த 26-ம் தேதி மாலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவு 10 மணியளவில் குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றில் 15 அடி உயரமுள்ள காமராஜர் பாலத்தை தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டோடியது.

கவுன்டன்யா ஆற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத அளவாக 10 ஆயிரத்து 997 கன அடி வீதம் சென்ற வெள்ளநீர் பள்ளிகொண்டா அருகே பாலாற்றில் கலந்தது. குடியாத்தம் நகரில் ஆற்றின் கரையோரங்களில் 2,000-க்கும் அதிகமானோர் வசிப்பதால் இரவு நேரத்தில் உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 950 பேர் நிவாரண முகாம்களிலும் மற்றவர்கள் தங்களது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளுக்கும் சென்றனர்.

ஆற்றில் சிக்கிய பெண்

இதற்கிடையில், செதுக்கரை பொன்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எல்லாம்மாள் (55) என்பவர் கவுன்டன்யா ஆற்றின் நடுவில் உள்ள தீவுப்பகுதியில் குடிசை அமைத்து பன்றிகள் வளர்த்து வருகிறார். கனமழையால் ஆற்றில் வெள்ளம் வந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் எல்லம்மாள் மட்டும் மாயமானது தெரியவந்தது. அவரை தொடர்புகொள்ள செல்போன் எதுவும் இல்லாத நிலையில் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் எல்லாம்மாள் மாயமானது குறித்து வருவாய்த் துறை அலுவலர்களிடம் நேற்று (நவ. 27) பகலில் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் தலைமையிலான குழுவினர் எல்லம்மாள், நிவாரண முகாம்களில் எங்காவது தங்கியுள்ளாரா? என்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து ட்ரோன் உதவியுடன் ஆற்றுப் பகுதியில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆற்றின் தீவு போன்ற பகுதியில் முட்புதர்களுக்கு நடுவில் எல்லம்மாள் மட்டும் தனியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் சென்றதால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வருவதற்குள் இரவு நேரமானதால் மீட்புப் பணி கைவிடப்பட்டது.

கவுன்டன்யா ஆற்றின் நடுவில் இருந்த தீவுப்பகுதியில் சிக்கிய எல்லம்மாளை படகில் மீட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.
கவுன்டன்யா ஆற்றின் நடுவில் இருந்த தீவுப்பகுதியில் சிக்கிய எல்லம்மாளை படகில் மீட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.

இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று (நவ. 28) படகில் சென்று எல்லம்மாளை மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர். உடல் சோர்வாக காணப்பட்ட அவருக்குத் தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவரது உறவினர்கள் வசம் எல்லாம்மாள் ஒப்படைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in