Published : 28 Nov 2020 10:13 AM
Last Updated : 28 Nov 2020 10:13 AM

உடல் உறுப்பு தானம்; தொடர்ந்து 6-வது முறையாக முதன்மை மாநிலமாக மத்திய அரசின் விருது பெற்ற தமிழகம்: முதல்வர் பழனிசாமி மகிழ்ச்சி

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசால் விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து முதல்வர் பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ. 28) வெளியிட்ட அறிக்கை:

"நேற்று (நவ. 27) நடைபெற்ற 11-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் விருது வழங்கப்பட்டமைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக தொடர்ந்து 6-வது முறையாக இவ்விருதினை பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையிலும் தலைசிறந்து முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையிலும் செயல்படுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது, மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

2015 ஆம் ஆண்டு மின்சார விபத்தினால் இரு கைகளையும் இழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு 07.02.2018 அன்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைகள் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்தது பாராட்டுக்குரியது. இது இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இச்சிகிச்சைக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தேவைப்படும் உயரிய நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 1,392 கொடையாளர்களிடமிருந்து 8,245 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 3,005-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், புதுக்கோட்டையில் நடைபெற்ற உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மாரத்தானில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கலந்து கொண்டனர். இச்சாதனைகள் முறையே கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும், ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற செயல்பாடுகளால் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக தொடர்ந்து திகழ்கிறது. இதன்மூலம் உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாகவே தமிழ்நாடு மாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் கோவிட்-19 பெரும் தொற்று காலத்திலும் சிறப்பு நெறிமுறைகளை உருவாக்கி, 97 உடலுறுப்புகளை 27 உறுப்பு கொடையாளிகளிடமிருந்து பெற்று, தடையின்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு எனது தலைமையிலான அரசு சாதனை படைத்து வருகிறது.

இந்திய திருநாட்டில், தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6-வது முறையாக முதன்மை மாநிலம் என்ற விருதினை மத்திய அரசிடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை இத்தருணத்தில் அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x