Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM

சென்னையில் சீரடைந்தது மின் விநியோகம்: புறநகர் பகுதிகளில் மின்தடையால் மக்கள் அவதி

சென்னையில் மின்விநியோகம் 90 சதவீதத்துக்குமேல் வழங்கப்பட்டுள்ள நிலையில், புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

‘நிவர்’ புயல் நேற்று முன்தினம் அதிகாலை கடந்தது. புயலால் மின்விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்காக, மின்வாரியம் கடந்த 25-ம் தேதி மதியமே மின்விநியோகத்தை நிறுத்தியது.

புயல் கரையைக் கடந்தபோது 16 மாவட்டங்களில் சேதம் அடைந்த 2,476 மின்வழிப் பாதைகளில் (பீடர்) 2,336 பீடர்கள் நேற்று காலை 9 மணிக்குள் சீரமைக்கப்பட்டு விட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பீடர்கள் சீரமைப்பு

குறிப்பாக, சென்னையில் பழுதடைந்த 536 பீடர்களும் சரி செய்யப்பட்டு விட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதேநேரம்,சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் பழுதடைந்த 276 பீடர்களில் 249 பீடர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 220 பீடர்களில் 187-ம், திருவள்ளூர் மாவட்டத்தில் 339 பீடர்களில் 329-ம் சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், சென்னையின் புறநகர் பகுதிகளான பொத்தேரி,கூடுவாஞ்சேரி, ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

சில பகுதிகளில் 4 அல்லது 5 மணி நேரத்துக்கு ஒருமுறை மின்சாரம் வருகிறது. வந்த ஒருசில நிமிடங்களுக்குள் மீண்டும்மின்விநியோகம் துண்டிக்கப்படு கிறது. சில இடங்களில் 24 மணி நேரத்துக்கும் மேலாக மின் விநியோகம் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்கள், மாணவர்கள் பாதிப்பு

இதனால், பொதுமக்கள் வீடுகளில் அத்தியாவசிய வேலைகளைக்கூட செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது பல்வேறு நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிகின்றனர். அத்துடன் பள்ளி மாணவர்களும் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் கல்வி கற்கின்றனர். மின்தடை காரணமாக அவர்களும் அவதிப்பட்டனர். எனவே, தடைபட்டுள்ள இடங்களில் மின்விநியோகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என புறநகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரத்தில்...

தாம்பரம் மின்கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜன் கூறும்போது, ‘‘தாம்பரம் கோட்டத்தில் சேதமடைந்த 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன.

குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ள பெரும்பாக்கம், வரதராஜபுரம் ஊராட்சி ராயப்பா நகரில்தண்ணீர் வடிந்த பிறகே இணைப்புவழங்கப்படும்.

புயல் தொடங்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக துணை மின்நிலையங்களில் போதிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x