Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்: மத்திய அரசின் விருதை 6-வது ஆண்டாக வென்று சாதனை

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வு மையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை சிறப்பாக செயல்படுத்திய குழுவினருக்கு சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார். உடன் தமிழக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணைய உறுப்பினர் செயலர் காந்திமதி, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம்.படம்: க.பரத்

சென்னை

உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6-வது முறையாக சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

தேசிய அளவிலான 11-வதுஆண்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. கரோனா தொற்று காலக்கட்டம் என்பதால் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில், இணை அமைச்சர் அஸ்வின் குமார் சவுபே முன்னிலையில் இணையவழியில் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் சென்னையில் இருந்தபடி சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணைய உறுப்பினர் செயலர் ஆர்.காந்திமதி, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோரும், புதுக்கோட்டையில் இருந்தபடி சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த மாநிலத்துக்கான விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், அஸ்வின் குமார் சவுபேவழங்க அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை சிறப்பாக செயல்படுத்திய சென்னை அரசு பொது மருத்துவமனை, வேலூர் சிஎம்சி உள்ளிட்டமருத்துவமனைகள் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சையை சிறப்பாக செய்யும் சென்னைஅரசு ஸ்டான்லி மருத்துவமனை குழுவினருக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக 6-வது ஆண்டாக தமிழக அரசுக்கு விருது கிடைத்துள்ளது. துயரமான காலத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்த கொடையாளர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறோம். இதுவரை மூளைச்சாவு அடைந்த 1,392 பேரின் 8,245 உறுப்புகள் தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் கூட 107 கல்லீரல், 183 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த6 பேருக்கு நுரையீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 2 கைகளும் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட திண்டுக்கல் இளைஞர் நலமுடன் உள்ளார். ரத்த தானம், உடல் உறுப்பு தானம், பிளாஸ்மா தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உறுப்பு தானம் செய்யும் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை தர கோரியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x