

செம்மஞ்சேரியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் மக்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிவர் புயலில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு சிறப்பானபணியை மேற்கொண்டுள்ளது.
இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு இருப்பது பாராட்ட வேண்டியது. பாதிக்கப்பட்ட மக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான உணவுகள் வழங்கப்படுகின்றன.
இருப்பினும், சில தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், செம்மஞ்சேரி போன்ற குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை ராட்சத குழாய்கள் மூலம் உடனடியாக அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது தேமுதிக தென்சென்னை மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.