

தூத்துக்குடிக்கு தெற்கே கன்னியாகுமரியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் எல்லையையொட்டிய இந்திய கடல் பகுதியில் போதைப் பொருட்களுடன் சுற்றிய இலங்கை படகை இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 25-ம் தேதி மடக்கினர். அந்த படகில் ரூ.500 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹெராயின் மற்றும் 20 சிறிய பெட்டிகளில் சிந்தட்டிக் போதைப் பொருட்கள் இருந்தன.
மேலும் 5 நவீன துப்பாக்கிகள், சேட்டிலைட் போன் உள்ளிட்டவைகளும் இருந்தன. படகில் இருந்தஇலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த நீந்து குலசூரிய சாத்தமனுவேல் (40) மற்றும் வான குலசூரிய ஜீவன் (30), சமீரா(32), வர்ண குலசூர்யா மனுவேல் ஜீவன் பிரசன்னா (29), நிசாந் கமகே(46), லட்சுமணகுமார் (37) ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றுமுன்தினம் பிற்பகலில் 6 பேரையும் தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கியூ, ஐபி, ரா போன்ற மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரிக்கப்பட்டது. மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல இயக்குநர் புருனோ தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை வரை 6 பேரிடமும் விசாரணையை தொடர்ந்தனர்.