Published : 05 Oct 2015 02:20 PM
Last Updated : 05 Oct 2015 02:20 PM

லாரிகள் வேலைநிறுத்தம்: கோவையில் ரூ.500 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு; காய்கறிகள் தேக்கம்

சுங்கச்சாவடிகளை எதிர்த்து நடைபெற்று வரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் கோவை மாவட்டத்தில் சுமார் ரூ.500 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையத்தில் காய்கறிகள் தேக்கமடைந்து அழுகத் தொடங்கியுள்ளன.

சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.1-ம் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் சரக்குப் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் சிமென்ட், கம்பி, தீவனங்கள், பம்ப்செட்டுகள், கிரைண்டர்கள் உள்ளிட்டவை வர்த்தகத்துக்கு எடுத்துச் செல்லப்படாமல் உள்ளன. மேலும் காய்கறிகள் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதால், 4 நாட்களில் கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.500 கோடி அளவில் வர்த்தகம் பாதித்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.

சங்கத் தலைவர் கே.எஸ்.கலியபெருமாள் கூறும்போது, 'தண்ணீர், பால், மருந்துப் பொருட்கள், சிலிண்டர், ரேஷன் உள்ளிட்டவற்றை மனிதாபிமான அடிப்படையில் இயக்க அனுமதிக்கிறோம். இதனால் 5 சதவீத லாரிகள் இயங்குகின்றன. இன்று (அக்.5) டெல்லியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்றால் இந்த லாரிகளும் நிறுத்தப்படும் வாய்ப்புள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தமாக 25 ஆயிரம் லாரிகளும், நகரில் மட்டும் 15 ஆயிரம் லாரிகளும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன' என்றார்.

மண்டிகளில்…

லாரிகள் வேலைநிறுத்தம் காரண மாக நீலகிரி மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்படும் மலைக் காய்கறிகளான முட்டைகோஸ், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, பீட்ரூட், கேரட் உள்ளிட்டவை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஏல மண்டிகளில் தேக்கமடைந்துள்ளன.

ஓரிரு நாட்களில் அழுகிவிடக்கூடிய காய்கறிகளும், தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகளுக்கும், மண்டி வியாபாரிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரிகளைத் தவிர்த்து, சிறு,சிறு வாகனங்களில் சில வியாபாரிகள் காய்கறிகளைக் கொண்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்துச் செலவு அதிகமாவதோடு, வெளியூர்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகளும், விவசாயிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x