3 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் பாலாற்றில் வெள்ளம்

3 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் பாலாற்றில் வெள்ளம்
Updated on
1 min read

வேலூரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்று பாலத்தின் வழியாக கரைபுரண்டோடிய வெள்ளத்தை பொதுமக்கள் மகிழ்ச்சி யுடன் கண்டு ரசித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயலால் பெய்த கனமழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் நீராதாரமாக மலட்டாறு, மேல் அரசம்பட்டில் இருந்து வரும் அகரம் ஆறு, பேயாறு மற்றும் கவுன்டன்யா ஆறு, பொன்னை ஆறு உள்ளிட்டவை உள்ளன.

இதில், நிவர் புயலால் அகரம் ஆறு மற்றும் கவுன்டன்ய ஆற்றில் இருந்து அளவுக்கு அதிகமான நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கவுன்டன்யா ஆற்றில் இருந்து சராசரியாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமும், அகரம் ஆற்றில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு ஆறுகளும் பள்ளிகொண்டா அருகே பாலாற்றில் கலக்கின்றன. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்குத் தொடங்கி நேற்று காலை 10 மணி என 12 மணி நேரத்துக்குள் அதிகப்படியான தண்ணீர் வரத்தால் வேலூரை வந்தடைந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம் வரும் தகவலால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் பாலாற்றின் இரண்டு பாலங்களில் இருந்தபடி கண்டு ரசித்தனர்.

பள்ளிகொண்டா அடுத்த கவசம்பட்டு பகுதியில் பாலாறு இரண்டாகப் பிரிந்து காட்பாடி திருமணி அருகே மீண்டும் ஒன்றாக சேருகிறது. இரண்டு ஆற்றுப் பகுதியிலும் நேற்று வெள்ளநீர் சென்றதால் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மழையளவு விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி குடியாத்தத்தில் 78.50 மி.மீ, காட்பாடியில் 116.80, மேல் ஆலத்தூரில் 66, பொன்னையில் 165, வேலூரில் 137.50, அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் 135.60, மோர்தானா அணை பகுதியில் 110 மி.மீ மழை பதிவாகியிருந்தன.

மழை சேதம்

வேலூர் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்பால் 37 குடிசைகள், 2 ஆடுகள், 132.78 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பப்பாளி, நெற்பயிர்கள் சேதமடைந்தது தெரியவந்துள்ளது. வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பயிர் சேதம் குறித்து தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in