

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புறவழிச்சாலை மேம்பாலப்பணியால் மழைநீரில் ஒரு கிராமமே மூழ்கியது. இதனால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவகோட்டை அருகே திருமணவயல் ஊராட்சி தச்சவயலில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் இருந்து மழைநீர் வெளியேறும் வகையில் சிறிய பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அக்கிராமம் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை அமைகிறது. இதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக மழைநீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய பாலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று (நவ. 26) இரவு அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. மழைநீர் வெளியேற வழியின்றி ஊருக்குள் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் நடமாட முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து, இன்று (நவ. 27) காலை புறவழிச்சாலை மேம்பாலப் பணி நடக்கும் இடத்தில் கிராம மக்கள் பணியாளர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதையடுத்து, ஒப்பந்ததாரர் பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, கிராமமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.