Published : 27 Nov 2020 08:45 PM
Last Updated : 27 Nov 2020 08:45 PM

நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி; கால்நடைகள் உயிரிழப்புக்கும் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ. 27) வெளியிட்ட அறிக்கை:

"இந்திய வானிலை ஆய்வு மையம் 25.11.2020 அன்று இரவு காரைக்கால் - மகாபலிபுரம் அருகில் நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தியது.

இதன் காரணமாக, உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. புயல் கரையைக் கடந்தபோது அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிவர் புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், குடும்பம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஒரு கிலோ பருப்பும், சமையல் எண்ணெயும் வழங்க உத்தரவிட்டேன்.

புயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க, அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் நிவர் புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இப்புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கன்று ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிவர் புயல் காரணமாக 302 குடிசை வீடுகள் முழுமையாகவும் 1,439 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 161 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.

நிவர் புயல் காரணமாக, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில், 2,064 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டு விட்டது.

நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 108 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 2,927 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள மின் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனது தலைமையிலான அரசு நிவர் புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 1,220 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 275 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது வரை சுமார் 85 ஆயிரத்து 331 நபர்கள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். தேவையான மருந்து மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை மேற்கொண்டு வருகிறது.

வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி, குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை கருத்தில் கொண்டு, இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இது தவிர பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையும் பெற்றுத் தரவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

எனது தலைமையிலான அரசு, சேதமடைந்த பகுதிகளை சீர்செய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x