

சேலம் அருகே அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சகோதரி திருமணத்துக்குச் சென்ற இளைஞர் உள்பட மூவர் பலத்த காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு வான்மதி என்ற மகளும், ஜெகதீஸ் (27) என்ற மகனும் உள்ளனர். வான்மதிக்கும், மல்லூரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இன்று (நவ. 27) திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சகோதரியின் திருமண விழாவில் கலந்து கொள்ள ஜெகதீஸ் தனது நண்பர்களான தொட்டில்பட்டியை சேர்ந்த அஜித் (20), அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(20) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் மல்லூரை நோக்கி சென்றார்.
இன்று அதிகாலை மல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜெகதீஸ் மற்றும் நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகதீஸ், அஜித், கார்த்திகேயன் ஆகிய மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
சம்பவ இடத்தில் அஜித், கார்த்திகேயன் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மல்லூர் போலீஸார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜெகதீஸை மீட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெகதீஸ் உயிரிழந்தார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து மல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.