

முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்ட உள்ளதை கண்டித்து தொடர் ஜோதி பயணம் மேற்கொள்ளப்படும் என, ஐந்து மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் இன்று (நவ. 27) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைவர் எஸ்.ஆர்.தேவர் கூறியதாவது:
"உச்ச நீதிமன்றம், நிபுணர்கள் மற்றும் பல்வேறு ஆய்வு குழுக்களும் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று ஒரு முறைக்கு பலமுறை சான்றளித்துள்ளது. அதன் பின்னரும் கேரள அரசும், அங்குள்ள அரசியல்வாதிகளும் மாற்று அணை கட்டுவோம் என்று பிடிவாதமாக உள்ளனர்.
மேலும், மத்திய நீர்வளத் துறையிடம் அனுமதி பெற்று நில அளவீடு செய்யத் தொடங்கியுள்ளது. இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அதனால், மத்திய, மாநில அரசு உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரளாவுக்குக் கொடுத்த மதிப்பீட்டு வரைவுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, டிசம்பர் 16-ம் தேதி தொடர் ஜோதி பயணம் தொடங்க உள்ளது.
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தொடங்கி சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் வழியே தேனி மாவட்டத்திற்கு வரும். தேனியில் இருந்து சீலையம்பட்டி, சின்னமனூர், அம்மாபட்டி, உத்தமபாளையம் வழியாக லோயர்கேம்ப் பென்னிகுயிக் மண்டபத்தில் நிறைவு பெறும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உடன் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், பொதுச் செயலாளர் பொன் சாட்சிக்கண்ணன், செயலாளர் சலேத்து, பொருளாளர் லோகநாதன், இணைச்செயலாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் இருந்தனர்.