Last Updated : 27 Nov, 2020 06:57 PM

 

Published : 27 Nov 2020 06:57 PM
Last Updated : 27 Nov 2020 06:57 PM

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழையால் வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகள்; பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

நிவர் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணையின் நீர்மட்டம் 7.55 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிவர் புயல் காரணமாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி ஆகிய பகுதிகளைக் காட்டிலும் நாட்றாம்பள்ளி, ஆலங்காயம், வாணியம்பாடி, ஆம்பூர், வடபுதுப்பட்டு ஆகிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. கனமழை காரணமாக வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி, அம்பலூர் ஆகிய பாலாற்றுப் பகுதிகளில் இன்று (நவ. 27) மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதைக் காண அப்பகுதி மக்கள் பாலாற்றுப் பகுதிக்கு இன்று காலையில் திரண்டனர்.

வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆம்பூர் அடுத்த வடச்சேரி - மாராப்பட்டு இடையேயுள்ள தரைப்பாலத்தில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. நிவர் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆம்பூர் அடுத்த மின்னூர் ஏரி, விண்ணமங்கலம் ஏரி, பெரியவரிகம் ஏரிகளில் தற்போது நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

வடச்சேரி - மாராப்பட்டு தரைப்பாலத்தில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து பாலாற்றில் கலக்கிறது.

அதேபோல, திருப்பத்தூர் அடுத்த பெருமாம்பட்டு ஏரி, பசிலிக்குட்டை ஏரி, ஆதியூர் ஏரி, பெரிய ஏரி ஆகியவற்றிலும் தற்போது நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் மலை உச்சியில் இருந்து மழைநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும், ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணையின் நீர்மட்டம் 7.55 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. கனமழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. எஞ்சியுள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் திருப்பத்தூர் மாவட்ட பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் (நீர்வரத்து) குமார் இன்று கூறியதாவது:

"நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த மழை பெய்தது. இதன் மூலம் குரும்பேரி, சிம்மணபுதூர் ஏரி, பொம்மிக்குப்பம் ஏரி ஆகிய 3 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. ஜடையனூர் ஏரி 75 சதவீதம் நிரம்பியுள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் ஓரிரு நாளில் ஜடையனூர் ஏரியும் முழுமையாக நிரம்பும்.

ஜடையனூர் ஏரியில் 75 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது.

மேலும், பெருமாம்பட்டு ஏரி 40 சதவீதமும், பசிக்குட்டை ஏரி, ஆதியூர் ஏரி, ஆம்பூர் பெரியாங்குப்பம் ஏரி, மின்னூர் மற்றும் விண்ணமங்கலம் ஏரி ஆகியவை 25 சதவீதம் நிரம்பியுள்ளன. ஆண்டியப்பனூர் அணையின் மொத்தக் கொள்ளளவில் 92 சதவீதம் நீர் உள்ளது. ஜவ்வாது மலைத்தொடர்களில் இருந்து மழைநீர் தொடர்ந்து வந்தால் ஆண்டியப்பனூர் அணையும் 2 நாட்களில் நிரம்பும் என எதிர்பார்க்கிறோம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால், பொதுமக்கள் மழைநீரை வேடிக்கை பார்க்க யாரும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம்.

ஏரி, குளம், குட்டை ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியிருப்பதால் இளைஞர்கள், சிறுவர்கள் அதில் குளிக்கலாம் எனச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும்" .

இவ்வாறு பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் (நீர்வரத்து) குமார் தெரிவித்தார்.

இன்று காலை நிலவரப்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்:

ஆம்பூர் 133.5 மி.மீ., ஆலங்காயம் 122.4 மி.மீ., வடபுதுப்பட்டு 159.2 மி.மீ., நாட்றாம்பள்ளி 35.8.மி.மீ., திருப்பத்தூர் 31.6 மி.மீ., வாணியம்பாடி 92.0 மி.மீ., கேத்தாண்டப்பட்டி 33.0 மி.மீ. என மொத்தம் 607.5 மி.மீ. மழையளவு பதிவாகியிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x