

நிவர் புயலால் 42 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் அதிக மழைப்பொழிவால் பல ஏரிகள் நிரம்பியுள்ளன. அத்துடன் புயல் பாதிப்புத் தொடர்பாக துறைவாரியாகக் கணக்கெடுப்பும் தீவிரமடைந்துள்ளது.
நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் 30 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. இது கடந்த 1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி பெய்த கடும் மழையில் பதிவான 32 சென்டிமீட்டர் மழை அளவுக்கு நெருங்கியுள்ளது. அதாவது, 42 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் தற்போது அதிக அளவில் மழை பொழிந்துள்ளது. இந்த மழையால், புதுச்சேரியில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரியின் கொள்ளளவு 4 மீட்டரில் 2.5 மீட்டர் வரை நீர் நிரம்பியுள்ளது.
அடுத்த பெரிய ஏரியான பாகூர் ஏரி மற்றும் 50க்கும் மேற்பட்ட ஏரிகளில் நீர் நிரம்பி உள்ளன. இவை அனைத்திலும் நீர் நிரம்பியுள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் புதுச்சேரியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நிவர் புயல் சேத விவரம் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
நிவர் புயலால் புதுச்சேரியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்திருந்தது. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வெளியேற்றப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட மின் விநியோகமும் படிப்படியாகச் சீராகியுள்ளது.
முதல்வர் நாராயணசாமி உத்தேசமாக, ரூ.400 கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசின் துறைகளுக்கும் சேத விவரங்கள் குறித்துக் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அரசின் வேளாண்துறை, மின்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பாதிப்பு குறித்துக் கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
விரைவில் துறைவாரியாகத் தனித்தனியாக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த விவரங்களை ஒருங்கிணைத்து மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்க புதுவை அரசு திட்டமிட்டுள்ளது.