

மிக மிக மோசமான ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது என்று, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவரானது முதல் ரங்கசாமி மவுனமாக இருந்தார். மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் மவுனம் கலைக்கவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சி அலுவலகத்தை இடம் மாற்றினார். பின்னர், மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல்களிலும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் தற்போது அலுவலகத்தை மாற்றியுள்ளார். அப்போது, "அதிமுக, பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம். இந்தக் கூட்டணி தொடரும்" என ரங்கசாமி தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று (நவ. 27) அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளரும், எம்எல்ஏவுமான அன்பழகன் தலைமையில் எம்எல்ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் என்.ஆர்.காங்கிரஸ் புதிய அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினர்.
அதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மரியாதை நிமித்தமான சந்திப்புக்காக அதிமுக எம்எல்ஏக்கள் வந்தனர். பாஜக, அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தொடர்கிறது.
முதல்வர் நாராயணசாமி அவரது பணியைச் சரியாகச் செய்ய வேண்டும். அவர் முதலில் அரசை சரியாக நடத்தட்டும். அவர் பொறுப்பு ஏற்றது முதல் ஆளுநரைத்தான் குறைகூறி ஆட்சி நடத்துகிறார்.
மக்கள் நலனில் அக்கறை எடுத்து மற்றவர் மீது பழியைப் போடாமல் ஆட்சி நடத்தட்டும். மிக மிக மோசமான ஆட்சி இது. புதிய திட்டம் ஏதும் கொண்டு வரவில்லை. நாங்கள் ஆரம்பித்த திட்டங்களைத்தான் செய்கிறார்கள். ஒரு புதிய அடிக்கல் கூட நாட்டவில்லை.
முதல்வர் நாராயணசாமி மற்றவர்கள் மீது பழி போட்டுத் தப்பிக்கக் கூடாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது மக்களுக்கே தெரியும்.
எங்களுடைய கடந்த கால ஆட்சியையும், தற்போதைய ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எங்கள் கூட்டணிக்குப் பிரகாசமாக இருக்கும்" என்று ரங்கசாமி தெரிவித்தார்.