Last Updated : 27 Nov, 2020 03:11 PM

 

Published : 27 Nov 2020 03:11 PM
Last Updated : 27 Nov 2020 03:11 PM

நிவர் புயலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுக்கவில்லை: கூட்டணிக் கட்சி திமுக கடும் குற்றச்சாட்டு

நிவர் புயலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுக்கவில்லை என்று கூட்டணிக் கட்சியான திமுக குற்றம்சாட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசின் கூட்டணிக்கட்சியான திமுக அண்மைக்காலமாக கடுமையாக விமர்சனத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நிவர் புயல் தொடர்பாக ஆளும் காங்கிரஸ் அரசு செயல்பாடுகளையும் விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக, புதுச்சேரி திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ இன்று (நவ. 27) வெளியிட்ட அறிக்கை:

"வானிலை ஆய்வு மையம் நிவர் புயல் தொடர்பாக சுமார் ஒருவார காலத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, மக்களைப் பாதுகாப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசு அதிலிருந்து தவறி விட்டது.

மேலும், தொழிற்சலைகள், வணிக நிறுவனங்களை மூட வேண்டும், மக்கள் வீடுகளுக்குளே முடங்கி இருக்க வேண்டும் என அறிக்கை மட்டுமே வெளியிட்டது. இதனால் புயலுக்கு முந்தைய தினம் 25-ம் தேதி காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்கள் விலையும் அதிகரித்தது. விலை அதிகமாக விற்றதைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல், 26-ம் தேதி காலை பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக, பாண்லே பால் பல இடங்களில் கிடைக்கவில்லை. இதனால் குழந்தைகள், நோயாளிகள், முதியோர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர். புயலின்போது அரசு நிறுவனமான பாண்லே மூலம் தட்டுப்பாடு இன்றி பால் கிடைப்பதற்கு கூட இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான பிரீமியத்தை காலத்தோடு செலுத்தவில்லை. ஆனால், நிவர் புயலில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, மரவள்ளி போன்ற பயிர்கள் சேதாரத்திற்குள்ளாகி உள்ளது. இதனால் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நமக்கு நஷ்ட ஈடுத்தொகை கிடைக்குமா என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

காப்பீட்டு நிறுவனம் பிரீமியம் செலுத்துவதற்கான காலம் முடிந்து விட்டதாகக் கூறி ஏற்க மறுத்தால் அரசே ஏக்கர் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ.10 ஆயிரம், வாழைக்கு ரூ.25 ஆயிரம் தர வேண்டும். கரும்பு, மரவள்ளி போன்ற பயிர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் தர வேண்டும். அதேபோல், இருவாரக் காலமாக தொழிலுக்குச் செல்லாத மீனவர்களுக்கு, மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்.

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பத்திற்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் மற்றும் மழைநீர் உட்புகுந்ததால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x